தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்காதது ஏன்? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தவெகவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை என்பதால் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான காங்கிரஸ் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று இரவு தமிழக வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, பிரதமர் நிகழ்வில் ஒன்றிய அரசு என முதல்வர் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, “மாநில அரசும், மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு ஒரு கருத்தை சொல்லிவிட முடியாது. மத்திய அரசு என்று சொல்லலாம் ஒன்றிய அரசு என்றும் சொல்லலாம், அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதை வைத்துக்கொண்டு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் முடிச்சு போடக்கூடாது. ஒன்றிய அரசு மத்திய அரசு என்பது ஒரே அர்த்தம்தான். money என்றாலும் ரூபாய் என்றாலும் ஒன்றுதான்” என விளக்கம் அளித்தார்.

ADVERTISEMENT

சென்னையில் மின்வெட்டு ஏற்பட்டது குறித்த கேள்விக்கு, டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதால் காலையில் மின்வெட்டு ஏற்பட்டது. இது சகஜமாக நடப்பது, அது வெடித்தால் நாம் என்ன செய்ய முடியும்? அரை மணி நேரத்தில் சரி செய்துவிட்டார்கள்.

மின்வெட்டு என்பது வேறு, திமுக ஆற்காடு வீராசாமி இருந்த பொழுது இருந்ததுதான் மின்வெட்டு. ஆட்சி தோல்வி அடைவதற்கு காரணம் மின்வெட்டுதான் என அவர் சட்டமன்ற உரையிலேயே சொல்லி இருக்கிறார். ஆனால் எங்கள் நிலை அப்படி அல்ல என தெரிவித்தார்.

ADVERTISEMENT

மின்சார பற்றாக்குறை குறித்து பேசிய அவர், தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை என்பது ஆட்சிக்கு முன்பு இருந்தது. நாங்கள் ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம். வீடுகளுக்கு இணைப்பு மட்டும் இரண்டு லட்சம் பேர் கேட்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் திட்டங்கள் இருக்கிறது. தொழிற்சாலைகளை பொறுத்தவரை எப்படி பங்கீடு செய்வது என்பது முதல்வர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிரான போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு, “பொதுவாக ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒரு இடத்தில் நடைபெறுவது வழக்கம், அந்த நிகழ்ச்சியில் ஒரு இயக்கத்தை சார்ந்தவர்கள் கலந்து கொள்வது கலந்து கொள்ளாதது என்பது வேறு, எங்களை பொறுத்து வரை அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை. இந்த விவகாரத்தில் எங்களுடைய நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் பேசுவார், பேசவில்லை என்பது அல்ல. ஒவ்வொரு நிகழ்வும் ஒருவர் எடுத்து கொள்வதை பொறுத்து இருக்கின்றது.

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவர் இங்கே வந்த பொழுது இருவரும் சாதாரணமாக சென்று டீ சாப்பிட்டு விட்டு சென்று இருக்கிறார்கள். அடுத்த நாள் முதல்வர் பாரத பிரதமரோடு பங்கேற்கின்றார். அப்படியென்றால் மத்தியிலும் மாநிலத்திலும் இருக்கிற திட்ட உறவு முறைகள் தெளிவாக இருக்கிறது” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share