எஸ்.ஐ.ஆர், டெல்லி போராட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 13-ந் தேதி) விசாரணைக்கு வருகின்றன. ஆனால் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் தாக்கல் செய்த மனு இன்றைய விசாரணைப் பட்டியலில் இடம்பெறவில்லை.
இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தப் பணிகளால் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
நேற்று தேதி இரவு 11.25 மணிக்கு வெளியான உச்சநீதிமன்றத்தின் கூடுதல் விசாரணைப் பட்டியலின்படி, தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று பல்வேறு மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் குமார் ஜா, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) ஆகியோரின் மனுக்கள் விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும், வழக்கறிஞர் மேனகா குருசாமி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்கம் (SCAORA), இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்டோரின் மனுக்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆனால் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் தாக்கல் செய்த புதிய மனு இந்த கூடுதல் விசாரணைப் பட்டியலிலும் இடம்பெறவில்லை.
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் நேற்று (அக்டோபர் 12) புதிய மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுவை உச்சநீதிமன்றம் ஆய்வு செய்தபோது, அதில் 14 குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
வழக்கறிஞர்களின் அங்கீகார ஆவணங்கள், மனுவுடன் இணைக்கப்பட வேண்டிய சில ஆவணங்கள் மற்றும் நீதிமன்றக் கட்டணத்தில் ரூ.220 பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டியிருப்பதால் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு இன்றைய விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை.
