அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13-ந் தேதி) தீர்ப்பளித்துள்ளது. மேலும் 6 பேரின் தகுதி நீக்கம் தொடர்பாக 2 மாதங்களுக்குள் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
2026 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 47 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர். இதனால் கட்சிக் கொறடா உத்தரவை மீறியதாக 25 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய அதிமுக தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சத்தியபாமா, அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக்கொண்டார்.
ஆனால் தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது, இந்த 4 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது சட்டவிரோதமானது எனக் கூறி அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கடந்த ஜூன் 15-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக் கொறடா உத்தரவை மீறிய எஞ்சிய 21 எம்.எல்.ஏ.க்களை மன்னிப்பதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்தார். இதையடுத்து அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.
அதன்பின்னர் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், கரூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமாக்களையும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.
இதனால் ராஜினாமா செய்த 6 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவியும் தனியாக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, 6 எம்.எல்.ஏ.க்களும் தங்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே ராஜினாமா செய்ததாகவும், அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னரே ராஜினாமாக்களை ஏற்றதாகவும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த நிலையில் ராஜினாமாக்களை ஏற்றது அரசியல் சாசனத்திற்கு முரணானது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. முதலில் அக்டோபர் 9-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தலைமை நீதிபதி விடுப்பில் இருந்ததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், 6 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லுமா என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
அதில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இந்த 6 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது 2 மாதங்களுக்குள் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவு என்ன?
6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜினாமாக்களை ஏற்பதற்கு முன்பு சபாநாயகர் விரிவான விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டதால் அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கைகளை கைவிட வேண்டியதில்லை என்றும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நடவடிக்கைகளை சபாநாயகர் தொடர்ந்து மேற்கொண்டு 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
