‘அதிமுகவில் இருந்து இன்னும் 15 பேர்’: ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த அமைச்சர் செங்கோட்டையன்

Published On:

| By Pandeeswari Gurusamy

எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 15 பேர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவுக்கு வர இருக்கிறார்கள் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் இருந்து விலகி 6 எம்.எல்.ஏ-க்கள் தவெகவில் இணைந்தனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த வாக்கு எண்ணிக்கையில், அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகிய இருவரும் மீண்டும் வெற்றி பெற்று நேற்று எம்.எல்.ஏ-க்களாகப் பதவியேற்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் நேற்று இரவு கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் காலியாக உள்ள இன்னும் ஐந்து இடங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டி உள்ளது. நாளிதழ் செய்திகளைப் பார்த்திருப்பீர்கள்; வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விசுவநாதன் போன்றவர்கள் தனியாகக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன நிலை என்று அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு எங்களிடம் கேள்வி கேளுங்கள்” என்றார்.

இதைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 13) காலை கோபிசெட்டிபாளையத்தில் நடந்த விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்: “நல்லவேளை எடப்பாடி பழனிசாமி என்னைக் கட்சியை விட்டு நீக்கினார்; தப்பித்து இங்கு வந்து இப்போது வருவாய்த்துறை அமைச்சராக இருக்கிறேன். இல்லை என்றால் நானும் முன்னாள் அமைச்சராக உட்கார்ந்து வாயை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். ‘சரியான நேரத்தில் நீதானே நீக்கினாய்? பார் அவர் எங்கு இருக்கிறார் பார்!’ என்று அமைந்தது.

ADVERTISEMENT

இன்னும் அவர் திருந்திய பாடில்லை. ‘இன்னும் நாங்கள் அதைச் செய்வோம், இதைச் செய்வோம்; ஆட்சி இன்றைக்கு இருக்காது’ என்கிறார். என்னய்யா ஆட்சி இருக்காது? போகப் போக யானை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகப் போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் சீக்கிரம் 15 பேர் வரை வெளியே வர உள்ளனர். இதெல்லாம் அவருக்குத் தெரிகிறதா இல்லையா என்று தெரியவில்லை. நேற்றே கூட்டத்தைப் போட்டுவிட்டார்கள்; என்ன நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை” என்று பேசி உள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share