1 யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் செய்ய ஊழல் முறைகேடுகளே காரணம் – செந்தில் பாலாஜி

Published On:

| By Pandeeswari Gurusamy

“தவெக ஆட்சியில் மின்சார வாரியம் முழுக்க முழுக்க முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கிறது. சொந்த மின் உற்பத்தியைக் குறைத்து, வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 கொள்முதல் செய்வதற்கு ஊழல் முறைகேடுகளே காரணம்” என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னையில செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தலைவர் விஜய் பேசிய பழைய காணொளி ஒன்றைச் செய்தியாளர்களின் பார்வைக்கு அவர் காட்டினார். அந்த வீடியோவில், “தொழில்கள் பாதிக்கப்படுகின்றன; நாமும் கத்துகிறோம், போராடுகிறோம், கோரிக்கை வைக்கிறோம்; எதையும் இவர்கள் கண்டுகொள்வதில்லை. காரணம், தனியாரிடம் அதிக விலைக்குக் கரண்ட் வாங்க டெண்டர் விடுகிறார்கள். அப்படி டெண்டர் விடும் விவகாரங்களில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்” என்று விஜய் பேசியிருந்தது இடம்பெற்றிருந்தது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “அன்று எதிர்க்கட்சியாக இருந்து இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த தவெக தலைவர், இன்று முதல்வரான பிறகு அதே தவறைச் செய்து வருகிறார். இன்று தமிழ்நாட்டில் மின்வெட்டு பற்றிப் பேசாத நாட்களோ, செய்திகள் வராத நாட்களோ ஒரு நாளும் இல்லை. அரசு நிகழ்ச்சிகள், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழா மற்றும் நீதிபதிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில்கூட மின்வெட்டு ஏற்படுகிறது.

இதற்கு மின்வாரியம் ஒரு விளக்கம் அளிக்கிறது; சிறிது நேரத்தில் அமைச்சர்கள் மாற்று விளக்கம் சொல்கிறார்கள்; பிறகு மின்சார வாரியத்தின் விளக்கம் வாபஸ் பெறப்படுகிறது. உச்சபட்சமாகத் தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு நடக்கும் அளவிற்குத் தவெக அரசு மிக மோசமான நிர்வாகச் சூழலில் சிக்கியுள்ளது. வெறும் ரீல்ஸ்களை மட்டுமே நம்பி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த முதல்வர், துறைசார்ந்த இன்னல்களைப் பற்றித் துளியும் கவலைப்படவில்லை.

ADVERTISEMENT

மின்சாரத்துறை அமைச்சரோ, தனது துறை சார்ந்த கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் திணறி வருகிறார். ஆட்சிப் பொறுப்பேற்று 5 மாதங்களாகியும் மின்வெட்டுப் பிரச்சினைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின்துறை அமைச்சர் ஆரம்பத்தில் ‘ப்யூஸ் கேரியர் காணாமல் போய்விட்டது’ என்றார்; பிறகு ‘துறையில் கருப்பு ஆடுகள்’ என்றார். இப்படி ஒவ்வொரு காரணங்களை அடுக்கி வந்த அமைச்சர் கடைசியாக ‘பஞ்சாபில் 15 மணி நேரம் பவர் கட் உள்ளது’ என்று உட்சபட்சமாக பதில் சொன்னார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுதோறும் மின் தேவை சீராக அதிகரித்து வந்தது.

ADVERTISEMENT

“திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியில அதிகபட்ச மின் தேவை என்பது 16,000 மெகாவாட்டில் இருந்து 20,830 மெகாவாட் அளவிற்கு அதிகரித்தது. அந்த 5 ஆண்டுகளில் 4,349 மெகாவாட் மின்சாரம் தேவை அதிகரித்தது. ஒரு வருடம் சராசரியாக 1000 மெகாவாட், 1,500 மெகாவாட் இப்படி கூடுதலாக அதிகரிக்கப்பட்டு 4,349 மெகாவாட் அளவுக்கு இந்த ஐந்து ஆண்டுகளில் கூடுதல் மின் தேவை ஏற்பட்டன.

இப்படி ஆண்டுதோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மெகாவாட் மின் தேவை ஏற்பட்டாலும் கூட எந்தவித தடையும் இல்லாமல் சீரான மின் விநியோகம் செய்த அரசு, திராவிட மாடல் அரசு; அதை வழிநடத்தியவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இன்றைய அரசு இந்த ஐந்து மாத காலத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. பொதுவாக நாங்கள் ஆட்சியில இருக்கும்போது 2021-ல் இன்றைய மின் துறை அமைச்சர் ஒரு பதிவு அன்னைக்குப் போட்டிருக்கிறார். அதில் ’20 ரூபாய்க்கு மின்சார கொள்முதல் செய்கிறார்கள், ரிசைன் ஈ.பி. மினிஸ்டர்’ என்று ஒரு பதிவை போட்டிருக்கிறார். 2021-ல் இன்றைய மின் துறை அமைச்சர் அன்னைக்கு அரசியல் கட்சியினுடைய நிர்வாகியாக இருந்து, 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்றதுக்காக மின் துறை அமைச்சர் ரிசைன் செய்ய சொல்லி இருந்தார். இன்னைக்கு 35 ரூபாய்க்கு இன்றைய தவெக அரசு மின்சாரத்தைக் கொள்முதல் செய்கிறது.அதுவும் ஆந்திராவில் இருந்து என்கிறார்கள். அதற்குள் நான் போகவில்லை.

குறிப்பாக நாங்கள் அதிகபட்சம் 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்ற பொழுது என்ன சூழல் என்றால் பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிக உச்சபட்ச மின்சார தேவை ஏற்படும். இதனால் முன்னேற்பாடாக நவம்பர், டிசம்பர் மாசத்திலேயே நாங்க டெண்டர் போடுவதற்கான பணிகளை முன்னெடுப்போம். குறிப்பாக பொங்கலுக்கு முன்பாக அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

எந்த சூழ்நிலையில் நாங்கள் எக்ஸ்சேஞ்ச்ல போய் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யக்கூடிய அந்த சூழல் இருக்கும் என்றார். நமது சொந்த உற்பத்தி பிளாண்ட்களில் ஏதாவது ஒன்றில் பழுது ஏற்பட்டால் உற்பத்தி செய்ய முடிய வில்லை என்றால் நாம் எக்ஸ்சேஞ்ச்ல மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான ஒரு வசதி வாய்ப்பை நாம் வைத்திருந்தோம். இன்றைய அரசு முழுக்க முழுக்க வந்து வெளிச்சந்தையில் கொள்முதல் செய்யக்கூடிய ஒரு சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

தவெக ஆட்சியில் சொந்த மின் உற்பத்தி நிலையங்களில் 35 சதவிகிதம்தான் உற்பத்தி செய்கிறது. சொந்த உற்பத்தியை குறைத்து, வெளிச்சந்தையில் கொள்முதல் செய்கிறார்கள்.வேறு மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் அதிக தொகைக்கு மின்சாரத்தை விற்பதால், அந்தந்த மாநில அரசுகளே வாங்காத நிலையில், தமிழ்நாடு அரசு வாங்குகிறது.

திமுக ஆட்சியில் உபரியாக இருந்த 8,600 யூனிட் மின்சாரம் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அந்தளவுக்கு மின்சார வாரியத்தின் நிலை உயர்ந்திருந்தது” எனத் தெரிவித்தார்.

மேலும் தவெக ஆட்சியில் மின்சார வாரியம் முழுக்க முழுக்க முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கிறது. சொந்த மின் உற்பத்தியைக் குறைத்து, வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35 கொள்முதல் செய்வதற்கு ஊழல் முறைகேடுகளே காரணம்” என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share