6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கில் உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? முழு விவரம்!

Published On:

| By Mathi

Madras High Court AIADMK

அதிமுகவில் இருந்து விலகி முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13-ந் தேதி) தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில், எம்.எல்.ஏ.க்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டதாலேயே கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழான தகுதி நீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிடாது என்றும் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

2026-ம் ஆண்டு மே 4-ந் தேதி தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காத நிலையில், பிற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையில் அரசு அமைந்தது.

ADVERTISEMENT

மே 13-ந் தேதி சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகள் கிடைத்தன.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக, மே 11-ந் தேதி அதிமுக தனது எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சிக் கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தது. விஜய் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ஆனால் மே 13-ந் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் கட்சிக் கொறடா உத்தரவை மீறி விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதையடுத்து, மே 14-ந் தேதி கட்சிக் கொறடா உத்தரவை மீறிய 25 அதிமுக எம்.எல்.ஏ.க்களையும் அரசியலமைப்பின் 10-வது அட்டவணையின் கீழ் தகுதி நீக்கம் செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சபாநாயகரிடம் மனு அளித்தார். இதற்கிடையே, அதிமுகவைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

ADVERTISEMENT

மற்ற 21 எம்.எல்.ஏ.க்கள் அதிமுக கொறடா உத்தரவை மீறியதற்காக மன்னிப்பு கோரினர். அவர்களது செயலை மன்னிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மே 27-ந் தேதி சபாநாயகருக்குக் கடிதம் அளித்தார். இதனை ஏற்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், ஜூன் 9-ந் தேதி 21 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளைக் கைவிட்டார்.

இதற்கிடையே, அதிமுகவைச் சேர்ந்த மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

இந்த 6 பேரின் ராஜினாமாக்களையும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்து, அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதிமுக முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?

அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அரசியலமைப்பின் 190-வது பிரிவின்படி எம்.எல்.ஏ.க்கள் அளிக்கும் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, அவை உண்மையானவையா, சொந்த விருப்பத்தின் பேரில் அளிக்கப்பட்டவையா என்பதை விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

குறிப்பாக, மே 25-ந் தேதி பிற்பகல் சுமார் 2.30 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்ததாகவும், அதே நாளில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசிதழிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அதிமுக தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் அதே நாளில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததும் சுட்டிக்காட்டப்பது. இதனால், குறுகிய நேரத்தில் ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்டது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அதிமுக தரப்பு வாதிட்டது.

மேலும், இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் அரசியல் பேரம் நடைபெற்றிருக்கலாம் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

சபாநாயகர் முறையாக விசாரணை நடத்தியிருந்தால், அதிமுகவுக்கும் நோட்டீஸ் அனுப்பி அதன் ஆட்சேபனைகளைக் கேட்டிருக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

ஆனால் அவ்வாறு செய்யாமல் ராஜினாமாக்களை உடனடியாக ஏற்றுக்கொண்டது அரசியலமைப்பின் 190-வது பிரிவில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாத செயல் என்று அதிமுக தரப்பு தெரிவித்தது.

சபாநாயகர் அளித்த விளக்கம் என்ன?

இந்தக் குற்றச்சாட்டுகளை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தரப்பு மறுத்தது. எம்.எல்.ஏ.க்கள் அளித்த ராஜினாமாக்கள் அவர்களது சொந்த விருப்பத்தின் பேரில்தான் அளிக்கப்பட்டன என்பதை உறுதி செய்த பிறகே அவற்றை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ராஜினாமா கடிதங்களை அளித்த ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும், பதவி விலகுவது அவர்களது சொந்த முடிவுதானா என்று தனித்தனியாக விசாரித்ததாகவும் சபாநாயகர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அவர்களது முடிவில் யாருடைய கட்டாயமோ, மிரட்டலோ, தேவையற்ற அழுத்தமோ இல்லை என்பதை உறுதி செய்த பிறகே ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் ராஜினாமாக்களை ஏற்றுக்கொண்டதில் எந்தச் சட்டவிரோதமும் இல்லை என்று சபாநாயகர் தரப்பு வாதிட்டது.

சட்டசபை செயலாளர் முன்வைத்த முக்கியமான வாதம்

இந்த வழக்கில் சட்டசபைச் செயலாளர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதமும் முக்கியத்துவம் பெற்றது. ஒரு எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டால், அவர் பதவியில் இருந்தபோது செய்த செயல்களுக்கான தகுதி நீக்க நடவடிக்கைகள் தானாகவே முடிவுக்கு வந்துவிடாது என்று சட்டசபைச் செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, அரசியலமைப்பின் 10-வது அட்டவணையின் கீழ் ஏற்கெனவே தொடங்கப்பட்ட தகுதி நீக்க நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பின்னர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டதால் முடிவுக்கு வந்துவிடாது என்று வாதிடப்பட்டது.

எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் மீது ஏற்கெனவே தொடங்கப்பட்ட தகுதி நீக்க நடவடிக்கைகள் தொடரலாம். எனவே, ராஜினாமா காரணமாக அந்த நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிடும் என்ற அதிமுக தரப்பின் வாதம் சட்டப்படி தவறானது என்று சட்டசபைச் செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதம்

சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரசியலமைப்பின் 190(3)(b) பிரிவின்படி, ஒரு எம்.எல்.ஏ. எந்தக் காரணத்திற்காக ராஜினாமா செய்கிறார் என்பதை சபாநாயகர் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று வாதிட்டார்.

ராஜினாமா கடிதம் உண்மையானதா, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.தான் அதை அளித்தாரா, அவர் சொந்த விருப்பத்தில் பதவி விலகுகிறாரா என்பதைத்தான் சபாநாயகர் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

இந்த வழக்கில் ராஜினாமா கடிதங்களை சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் எழுதவில்லை என்ற குற்றச்சாட்டே முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, சபாநாயகர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டவை என்றும், அவற்றில் எந்த முறைகேடும் இல்லை என்றும் வாதிட்டார்.

மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி வாதம்

ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி, ஒரு எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்வதை மட்டும் வைத்து ஊழல் அல்லது முறைகேடு நடைபெற்றதாகக் கருத முடியாது என்று வாதிட்டார்.

எல்லா பதவி விலகல்களுக்கும் பின்னாலும் ஊழலோ, தவறான நோக்கமோ இருப்பதாகக் கூற முடியாது என்றும் தெரிவித்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வேறொரு கட்சியில் இணைவதற்கு முன்பே தங்களது சட்டசபை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார். எனவே, அவர்களது நடவடிக்கை தவறான நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது என்று கூற முடியாது என்றார்.

மேலும், ஒரு மக்கள் பிரதிநிதி தனது கட்சியிலிருந்து விலகவும், அரசியல் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தவும், பதவியை ராஜினாமா செய்யவும் உரிமை உள்ளது என்றும் வாதிட்டார். இது ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தும் ஒரு வழிமுறை என்றும் அவர் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், சம்பந்தப்பட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் அளித்த ராஜினாமாக்கள் உண்மையானவை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அந்த ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும் என்றும் தீர்ப்பளித்தனர்.

ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்யும்போது, அதன் பின்னணியில் உள்ள அனைத்து அரசியல் காரணங்களையும் கண்டறிய சபாநாயகர் விரிவான விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனால் 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்ட நடவடிக்கையில் தலையிட உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ராஜினாமா செய்தாலும் தகுதி நீக்க நடவடிக்கை தொடரும்

அதே நேரத்தில், இந்தத் தீர்ப்பில் உயர்நீதிமன்றம் மற்றொரு முக்கியமான உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

ஒரு எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பதற்காக, அவர் பதவியில் இருந்தபோது கட்சிக் கொறடா உத்தரவை மீறியதாகத் தொடங்கப்பட்ட தகுதி நீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிடாது என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

எனவே, சம்பந்தப்பட்ட 6 பேருக்கும் எதிராக அரசியலமைப்பின் 10-வது அட்டவணையின் கீழ் தொடங்கப்பட்ட தகுதி நீக்க நடவடிக்கைகளை சபாநாயகர் தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கைகளை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் சபாநாயகருக்கு உத்தரவிட்டனர்.

இதன் அடிப்படையில், அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுக்களை உயர்நீதிமன்றம் பகுதியளவில் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்துள்ளது.

தகுதி நீக்க நடவடிக்கை- முடிவு என்ன?

இதனால் 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாக்களை ஏற்ற சபாநாயகரின் முடிவு செல்லும் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கைகளில் சபாநாயகர் அடுத்த 2 மாதங்களில் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share