எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு : அதிமுக!

Published On:

| By Kavi

அதிமுகவில் இருந்து விலகி முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) தீர்ப்பளித்தது.

அதேநேரத்தில், எம்.எல்.ஏ.க்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டதாலேயே கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழான தகுதி நீக்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிடாது என்றும் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, ”கட்சி தாவியர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுகக் வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு கொடுத்தோம். 

எங்களது மனுவின் முதன்மையான கோரிக்கை, கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது, ராஜினாமா செய்துவிட்டுப் ‘பின்வாசல் வழியாக’ தப்பிப்பதற்கு எவரையும் அனுமதிக்கக் கூடாது என்பதே ஆகும்.

ADVERTISEMENT

சத்தியபாமா, மரகதம் குமரவேல் மற்றும் ஜெயகுமார் ஆகிய மூன்று நபர்களும் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த உடனேயே, மின்னல் வேகத்தில் மாற்றுக் கட்சியில் சென்று இணைந்துள்ளனர்.

ஒரு ஆட்சிக்கு போதிய ஆதரவு இல்லாத சூழலில், பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைப் பல்வேறு வழிகளில், அதாவது கொள்ளு வைப்பது அல்லது பணம் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு  திருடுவது குடுரை பேரம் ஆகும். 

ADVERTISEMENT

இத்தகைய குதிரை பேர ஊக்குவிப்பு கூடாது, அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணை நீர்த்து போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த வழக்கை நாங்கள் போட்டோம்.

அவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரிய எங்களது மனு நிலுவையில் உள்ளது. அத்தகைய சூழலில், சபாநாயகர் அவர்களின் ராஜினாமாவை ஏற்றிருக்கக் கூடாது.

193-B விதியின் கீழ், ஒருவர் ராஜினாமா செய்தால் அதை சபாநாயகர் ஏற்றுக்கொள்வார். ஆனால், கட்சி தாவல் புகார் நிலுவையில் இருக்கும்போது ராஜினாமாவை உடனடியாக ஏற்கக் கூடாது என்பதற்குச் ‘சிவராஜ் சிங் சவுகான் எதிர் மத்தியப் பிரதேச சபாநாயகர்’ வழக்கு மற்றும் ‘பாலா சாஹேப்’ வழக்கு ஆகிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவான முன்னுதாரணங்களாக உள்ளன. சபாநாயகரின் முடிவை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதற்கு உதாரணங்களாக நிறைய தீர்ப்புகள் உள்ளன.

எனவே சபாநாயகர் தவறு செய்திருக்கிறார் என்று நாங்கள் சுட்டிக்காட்டும்போது அதில் நீதிமன்றம் தலையிட்டிருக்க வேண்டும்.  ஆனால் தலையிடாததற்கு ஒரு விளக்கத்தைச் சொல்கிறார்கள். இதை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு செல்வோம்.  மேல்முறையீடு செய்வோம். 

மேலும், எங்களது மனுவை உயர் நீதிமன்றம் முழுமையாகத் தள்ளுபடி செய்துவிட்டதாகப் பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானது. ரவி என்பவரின் மனுவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிமுக தாக்கல் செய்த மனு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது..

கட்சி தாவல் தடைச் சட்டப் புகாரின் மீது இரண்டு மாதங்களுக்குள் விசாரணை நடத்தித் தகுதி நீக்க நடவடிக்கை குறித்து உத்தரவிடுமாறு சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தவறு நடந்துள்ளதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

அதேவேளையில், கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மூத்த அமைச்சர் செங்கோட்டையன், ‘இன்னும் 15 பேர் பேசி வருகிறார்கள்’ என்று பகிரங்கமாகக் கூறியிருப்பது, திறந்தவெளியில் குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் செயலாகும்” என்று குறிப்பிட்டார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share