இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சென்னையில் இந்தியா கூட்டணி கட்சியினர் நாளை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் 13 கோடிக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளன. இதில் முறைகேடு நடந்துள்ளது என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்புதெரிவித்து வருகின்றன. இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் பதவி விலகல் தொடர்பாக இந்தியா கூட்டணியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று தொடங்கிய போராட்டத்தின்போது ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதன்பின்னர் இந்த போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சமீபத்தில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பிலும் போராட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டங்களை நடத்த காவல்துறை தடை விதித்துள்ளது.
இந்த சூழலில், எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் சென்னை எழும்பூரில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், த.வெ.க., வி.சி.க., ம.தி.மு.க., ஐ.யூ.எம்.எல்., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர், மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன், வைகோ, தொல்.திருமாவளவன், கே.எம். காதர் மொய்தீன், எம்.வீரபாண்டியன், பெ.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ் மோகன்,”தேர்தல் ஆணையர் மாற்றம் தொடர்பான விவகாரத்தில், வெறும் தனிநபர் ஒருவரை மாற்றுவதால் மட்டும் எந்தப் பயனும் விளையாது என்பதே தமிழக வெற்றித் கழகத்தின் நிலைப்பாடாகும். இதுபோன்ற தனிநபர் மாற்றப் போராட்டங்கள் மூலம் உண்மையான பிரச்னையிலிருந்து மக்களைத் திசைதிருப்பவே ஆளும்கட்சியினர் முயல்கின்றனர். இத்தகைய திசைதிருப்பல் அரசியலுக்குத் தவெக ஒருபோதும் இணங்காது.
நாட்டின் தேர்தல் முறையில் நியாயமான மற்றும் சுதந்திரமான வாக்குப்பதிவு நடைபெற வேண்டுமெனில், SIR என்ற தேர்தல் நடைமுறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஏனெனில், தற்போதைய ஒட்டுமொத்த எஸ்.ஐ.ஆர் செயல்முறையுமே ஒரு மிகப்பெரிய மோசடியாகவே அமைந்திருக்கிறது.
ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பாகவே தவெக தலைவர் இதுகுறித்துத் தெளிவான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அன்றும் சரி, இன்றும் சரி, என்றும் சரி SIR நடைமுறையைத் தமிழக வெற்றித் கழகம் தீவிரமாக எதிர்க்கிறது.” என்று தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் நாளை சென்னையில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
