CJP: டெல்லி போலீஸ் தடையை மீறி ‘ஜந்தர் மந்தரில்’ ஊருடுவல்.. ‘கரப்பான் பூச்சிகளுக்கு’ 5 நாள் ஜெயில்!

Published On:

| By Mathi

Delhi CJP

டெல்லியில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதிக்குள் நுழைந்து தேசியக் கொடியை ஏந்தி முழக்கமிட்ட ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (காக்ரோச் ஜனதா கட்சி CJP) நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகிய 2 பேரை 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக டெல்லியில் அக்டோபர் 10-ந் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதும் போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கை.

ADVERTISEMENT

இந்தப் போராட்டங்களுக்கு காக்ரோச் பூச்சி ஜனதா கட்சி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டனர்.

இதனிடையே ஜந்தர் மந்தர் பகுதியைப் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலிலிருந்து டெல்லி போலீசார் நீக்கினர். இதற்குப் பதிலாக ராம்லீலா மைதானம், புராரி மைதானம், கிழக்கு டெல்லியில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய 3 இடங்கள் போராட்டங்களுக்காக அறிவிக்கப்பட்டன.

ADVERTISEMENT

ஆனால் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதைக் கைவிடப் போவதில்லை என காக்ரோச் ஜனதா கட்சியினர் தெரிவித்தனர். இந்த நிலையில், நேற்று காலை போலீசாரின் பலத்த பாதுகாப்பையும் மீறி சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்க்ய ஷிண்டே உள்ளிட்ட காக்ரோச் ஜனதா கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஜந்தர் மந்தர் பகுதிக்குள் நுழைந்தனர். ஜந்தர் மந்தர் செல்லும் முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். இதனால் மாற்றுப் பாதை வழியாகப் போராட்டக்காரர்கள் உள்ளே சென்றனர்.

அங்கு தேசியக் கொடியை ஏந்தியபடி முழக்கமிட்டனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்க்ய ஷிண்டே உள்ளிட்ட 14 பேரைப் போலீசார் தடுத்து வைத்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் இன்று (அக்டோபர் 14-ந் தேதி) மந்திர் மார்க் பகுதியில் உள்ள சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இருவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share