உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுக்க எத்தனை நாட்கள் ஆகும் என்று அறிக்கை தாக்கல் செய்யும்படி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், தனது வேட்புமனுவில், சொத்து விபரங்களை மறைத்துள்ளார் என்றும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேனியை சேர்ந்த மிலானி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 8ம் தேதி புகார் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் இந்த மனுவை தாக்கல் செய்து ஒரு மாதம் கடந்தும் விசாரணைக்கு எடுக்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகார் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்கவே சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் செப்டம்பர் மாதம் அளித்த புகார் மனுவை இதுவரை எடுக்கவில்லை. உதயநிதி ஸ்டாலின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர். அவருக்கு எதிரான இந்த புகாரை விசாரணைக்கு எடுக்காதது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், மனுதாரர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க எத்தனை நாட்கள் ஆகும் என்பது குறித்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
