மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்தும் மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்தும் தம்மை விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எல்.முருகன் (L.Murugan) இன்று (அக்டோபர் 13-ந் தேதி) 5 பக்க கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராக இருப்பவர் எல்.முருகன். தமிழக பாஜக தலைவராகவும் பதவி வகித்தவர்.
இந்த நிலையில், 2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜகவை வலுப்படுத்த முழுநேரக் கட்சிப் பணியில் ஈடுபட விரும்புவதாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு எல்.முருகன் அனுப்பிய கடித விவரம்:
அண்மையில் நீங்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தது எனது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் சென்ற ஒவ்வொரு இடத்திலும் மக்கள் மிகுந்த அன்புடன் வரவேற்றதையும், உங்களது வருகை அந்த மக்களிடம் ஏற்படுத்திய நம்பிக்கையையும் நேரில் பார்த்தேன்.
நீங்கள் தமிழ்நாட்டுக்கு தர முயற்சிக்கும் ஒளிமயமான எதிர்காலத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அவர்களது உற்சாகம் வெளிப்படுத்தியது. தமிழகத்துக்கான உங்களது அர்ப்பணிப்பையும், தமிழக மக்கள் உங்கள் மீது வைத்துள்ள அன்பையும் பார்த்து பெருமையும் நன்றியுணர்வும் அடைந்தேன். தமிழ்நாட்டுக்கும், நமது கட்சிக்கும், நாட்டுக்கும் இன்னும் அதிகமாகப் பணியாற்ற வேண்டும் என்ற எனது உறுதியை இது புதுப்பித்துள்ளது.
உங்களது தலைமையில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் சேவையாற்றியது எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய கவுரவம்.
நான் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். எனது பெற்றோர் தினக்கூலித் தொழிலாளர்களாகவும் கால்நடைகளை மேய்ப்பவர்களாகவும் பணியாற்றியவர்கள். இன்றும் கோனூர் கிராமத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். தங்களது மகன் ஒருநாள் மத்திய அரசில் அமைச்சராகப் பணியாற்றுவான் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

மகாகவி பாரதியார், சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஆகியோரின் தேசிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு கல்லூரிக் காலத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இணைந்தேன்.
ஏபிவிபி மற்றும் பாஜகவில் ஏறத்தாழ 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். நாடு முதலில், கட்சி அடுத்து, தனிநபர் கடைசியில் என்பதே எனது வழிகாட்டும் கொள்கையாக இருந்து வருகிறது.

உங்களது தலைமையும், அடிமட்டக் கட்சித் தொண்டர்களை அங்கீகரிக்கும் பாஜகவின் அணுகுமுறையும் நான் நினைத்துப் பார்க்காத பல வாய்ப்புகளை எனக்கு வழங்கின.
தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றியது முதல் 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது வரை பல பொறுப்புகளை வகிக்க வாய்ப்பு கிடைத்தது.
உங்களது அமைச்சரவையில் இடம்பெற்று தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள், மீன்வளம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றியுள்ளேன்.

சட்டசபைத் தேர்தலிலும் மக்களவைத் தேர்தலிலும் போட்டியிடும் வாய்ப்பையும் கட்சி எனக்கு வழங்கியது. நாட்டுக்கும் கட்சிக்கும் சேவையாற்ற இத்தனை வாய்ப்புகள் கிடைக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக உங்களது அமைச்சரவையில் பணியாற்றியபோது உங்களது பொறுமை, கருணை, அசாதாரணமான அர்ப்பணிப்பு ஆகியவற்றை அருகிலிருந்து பார்த்துள்ளேன்.
உங்களது தலைமையை திருவள்ளுவரின் இந்தக் குறள் பிரதிபலிக்கிறது.
“கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.”
தமிழ்நாட்டைப் பாதிக்கும் பிரச்சினைகள், போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் பாதுகாப்பு, இந்திய மீனவர்களின் நலன் உள்ளிட்ட விவகாரங்களில் உங்களிடம் உதவி கேட்டபோதெல்லாம், அந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாக முக்கியத்துவம் அளித்து விரைவாகத் தீர்வு காண நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நீங்கள் அளித்த ஆதரவு, தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், நெடுஞ்சாலை மேம்பாடு, அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் 26 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு ஆகியவற்றால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுவரும் மாற்றங்களைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழக மீனவர்களுக்கான ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு அளித்த ஆதரவும், சென்னை ஐஐடியில் உருவாகும் புதிய தொழில்நுட்ப முயற்சிகளில் நீங்கள் காட்டும் தனிப்பட்ட அக்கறையும், பாரம்பரிய வாழ்வாதாரங்களுக்கும் எதிர்கால வாய்ப்புகளுக்கும் நீங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.
எனது இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக நீங்கள் 3 முறை வந்ததை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. தமிழ் மொழி, பண்பாடு, நாகரிகத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு எங்களுக்குப் பெருமை அளித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழ் வரிகளை நீங்கள் மேற்கோள் காட்டியபோது, தமிழர் நாகரிகத்தின் காலத்தால் அழியாத செய்தியை உலகுக்கு எடுத்துச் சென்றீர்கள்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதியார் பெயரில் இருக்கை அமைக்கப்பட்டது, காசி தமிழ்ச் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் ஆகியவை தமிழ் பாரம்பரியத்தைப் போற்றுவதுடன், இந்தியாவின் பிற பகுதிகளுடனான உறவையும் வலுப்படுத்தியுள்ளன.
நமது சந்திப்புகளின்போது திருக்குறள் மீதான உங்களது அன்பைப் பற்றி அடிக்கடி பேசுவீர்கள். அண்மையில் ரஷ்ய அதிபர் புதினுக்கு திருக்குறள் நூலைப் பரிசளித்ததன் மூலம் அந்த ஞானத்தை மீண்டும் உலகுக்கு எடுத்துச் சென்றீர்கள்.
நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது எங்களது இதயங்களில் தனி இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய ஜனநாயகத்தின் மையத்தில் தமிழகத்தின் பாரம்பரியத்துக்குப் பெருமை சேர்த்துள்ளது.
தமிழ்நாட்டின் திறமைகளையும் பொதுவாழ்வில் பணியாற்றுபவர்களின் அர்ப்பணிப்பையும் நீங்கள் அங்கீகரித்துள்ளீர்கள்.

என்னுடன் நெருக்கமாகப் பணியாற்றிய இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆளுநர் பொறுப்புகள் வழங்கப்பட்டன. சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி பதவிக்கு உயர்ந்திருப்பது தமிழகத்துக்குக் கூடுதல் பெருமையை அளித்துள்ளது.
தமிழக பாஜக தலைவராக எனக்கு முன்பு பதவி வகித்த தமிழிசை சவுந்தரராஜனுக்கும் ஆளுநர், துணைநிலை ஆளுநர் பொறுப்புகள் வழங்கப்பட்டன.
நீண்ட காலமாக மத்திய நிதி அமைச்சராகப் பணியாற்றி வரும் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
இவை அனைத்தும் தமிழகத்தின் திறமை மீதும், நாட்டுக்கு தமிழகம் அளிக்கும் பங்களிப்பு மீதும் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.
கடுமையாக உழைக்கும் கட்சித் தொண்டர்களை நீங்கள் தொடர்ந்து அங்கீகரிப்பது ஒவ்வொரு தொண்டருக்கும் நம்பிக்கையை அளிக்கிறது. குடும்பப் பின்னணி எதுவாக இருந்தாலும் அர்ப்பணிப்பும் உழைப்பும் சேவையும் அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்துகிறது.
பிரதமர் அவர்களே, கட்சியிடமிருந்தும் உங்களது தலைமையிடமிருந்தும் எனக்குக் கிடைத்த அனைத்துப் பொறுப்புகளும் எனது கடமை உணர்வை மேலும் அதிகரித்துள்ளன.
இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும், பாஜகவுக்கும் நீங்கள் காட்டி வரும் அர்ப்பணிப்பைப் பார்க்கும்போது, என்னைப் பொதுவாழ்க்கைக்கு அழைத்து வந்த அடிமட்டக் கட்சிப் பணிகளுக்கு இன்னும் அதிகமாக என்னை அர்ப்பணிக்க வேண்டும் என்று உணர்கிறேன்.
எனவே, மத்திய இணை அமைச்சர் பொறுப்புகளிலிருந்து என்னை விடுவிக்கவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் துறக்க அனுமதிக்கவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்துவதற்காக முழுநேரமும் பணியாற்ற விரும்புகிறேன்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு தெருவுக்கும் செல்ல விரும்புகிறேன். மக்களை நேரில் சந்தித்து, கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாஜகவின் செல்வாக்கை விரிவுபடுத்த விரும்புகிறேன்.
அனைவருடனும் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கை என்ற உங்களது செய்தியை ஒவ்வொருவரிடமும் கொண்டு செல்ல விரும்புகிறேன். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் பயணத்தில் ஒவ்வொரு குடும்பமும் தனது பங்களிப்பை உணரச் செய்ய விரும்புகிறேன்.
அண்மையில் நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தபோது மக்களிடம் கண்ட அன்பும் நம்பிக்கையும், தமிழகத்தில் இன்னும் அதிகமாகச் சாதிக்க முடியும் என்ற எனது நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
2029 மக்களவைத் தேர்தலுக்காக தமிழக பாஜகவைத் தயார்படுத்துவதற்கு எனது முழு நேரத்தையும் ஆற்றலையும் செலவிட விரும்புகிறேன்.
உங்களது தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்பதற்காகவும், இந்த முறை தமிழ்நாட்டிலிருந்து மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்களவைத் தொகுதிகளை வென்று காட்டுவதற்காகவும் பணியாற்ற விரும்புகிறேன்.
கடந்த 5 ஆண்டுகளாக உங்கள் அரசில் பணியாற்ற வாய்ப்பளித்ததற்காக எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தினக்கூலித் தொழிலாளர்களின் மகன் மீது நீங்கள் வைத்த நம்பிக்கை எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக இருக்கும்.
மக்களிடையேயும் கட்சித் தொண்டர்களிடையேயும் ஓய்வின்றிப் பணியாற்றி அந்த நம்பிக்கைக்குக் கைம்மாறு செய்ய உங்களது ஆசீர்வாதத்தை வேண்டுகிறேன். இவ்வாறு எல்.முருகன் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
