உள்ளாட்சி தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ போட்டி – அண்ணாமலை அறிவிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

Annamalai

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சோழபாண்டியில், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: “ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கினால் மட்டுமே நாம் ஆரோக்கியமான அரசியலைப் பேச முடியும். அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமானால், உள்ளூர்களில் தலைவர்களை உருவாக்க வேண்டும்; அவர்களை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணி செய்ய வைக்க வேண்டும்.

ADVERTISEMENT

அடிப்படைப் பிரச்சினைகள் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைவர்களாக வாழ்பவர்கள் கீழே இறங்கி வந்து, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் ஆதாரங்களைச் சுத்தப்படுத்துவது தொடங்கி, மரம் நட்டுப் பேணிக்காத்து, அவற்றை மக்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் கொடுக்க வேண்டும் என்ற உன்னத கருத்துடன் ‘வீ த லீடர்ஸ்’ இயங்கி வருகிறது. 234 தொகுதிகளிலும் உள்ளாட்சிகளில் தலைவர்கள் உருவாக வேண்டும்.

வீ த லீடர்ஸ் அரசியல் கட்சியாக மாறும்போது, ‘நமக்கு இதுபோன்ற அரசியல் கட்சி வேண்டும்; இதற்குத்தான் நாம் காத்திருந்தோம்; இதுபோன்ற தலைவர்கள் வேண்டும்’ என்று நீங்களே சொல்வீர்கள். ஒரு அண்ணாமலை என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தானே தவிர, அது வேலைக்கு ஆகாது. 234 தொகுதிகளிலும் தலைவர்கள் உருவாக வேண்டும்.

ADVERTISEMENT

தமிழகத்தில் 12,525 பஞ்சாயத்துகள் உள்ளன; அப்படியானால், அத்தனை பஞ்சாயத்துகளிலும் தலைவர்கள் வேண்டும். அப்போதுதான் உண்மையான மாற்றம் நடக்கும். எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை உருவாக்குவதற்குச் கொஞ்சமாவது நேரம் வேண்டாமா?

நம் இயக்கத்தினர் உங்களின் அன்பைப் பெற்று, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவார்கள். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை அறிவிக்கும்போது, நாம் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்குவோம். அன்று ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவந்து, பின்னர் அடுத்து அறிவிக்கப்படும் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு, உள்ளாட்சியிலிருந்து சட்டமன்றம் வரை ‘வீ த லீடர்ஸ்’ மாற்றம் கொடுக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோம்.” என்றார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share