வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக ராகுல் காந்தி உள்ளிட்ட 10 கட்சிகளைச் சேர்ந்த 11 தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இந்த மனுவில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பெயர் இடம் பெறவில்லை. அண்மையில்தான் இந்தியா கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்த தவெக, ராகுல் காந்தியுடன் இணைந்து சட்டப் போராட்டத்தில் ஈடுபடாதது ஏன் என்ற கேள்வியை திமுக எழுப்பியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகவும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்றும் கூறி வருகின்றன.
மேலும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தியா கூட்டணி கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
டெல்லியில் செப்டம்பர் 30-ந் தேதி நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் போராட்டங்களைத் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அக்டோபர் 2-ந் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அக்டோபர் 6-ந் தேதி டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தை நோக்கி எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தின.
இந்தியா கூட்டணியில் தவெக
இந்தப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அக்டோபர் 3-ந் தேதி சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாகப் பங்கேற்றது. தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தவெக இந்தியா கூட்டணியில் இணைவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை வரவேற்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தவெக இந்தியா கூட்டணியில் இணைந்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். அதேபோல, இந்தியா கூட்டணியில் தவெக இணைந்திருப்பதை இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஆதவ் அர்ஜுனாவும் உறுதிப்படுத்தினார்.
மேலும், SIR நடவடிக்கைகள் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

அக்டோபர் 10-ல் விஜய் வீட்டில் ராகுல் காந்தி
இந்தியா கூட்டணியில் தவெக இணைந்த ஒரு வாரத்துக்குப் பின்னர், அக்டோபர் 10-ந் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தார். அப்போது சென்னை நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய்யின் இல்லத்துக்குச் சென்ற ராகுல் காந்தியை விஜய் கட்டியணைத்து வரவேற்றார்.
ராகுல் காந்திக்கு விஜய் மதிய விருந்து அளித்தார். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் அரசியல் நிலவரங்கள், இந்தியா கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்தச் சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் ராகுல் காந்தியும் விஜய்யும் ஒரே காரில் பயணம் செய்தனர். சென்னை பாலவாக்கத்தில் உள்ள தனியார் கஃபே ஒன்றுக்குச் சென்ற இருவரும் ஒன்றாக அமர்ந்து காபி குடித்தனர்.
உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணி
விஜய்யும் ராகுல் காந்தியும் ஒன்றாகக் காபி குடித்த அக்டோபர் 10-ந் தேதியே, டெல்லியில் SIR நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இதன் அடுத்தகட்டமாக அக்டோபர் 12-ந் தேதி ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறி, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், சிவசேனா உத்தவ் தாக்கரே அணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் அணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 10 கட்சிகளைச் சேர்ந்த 11 தலைவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
- காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே
- திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சவுகதா ராய்
- சமாஜ்வாதி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ்
- ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ்
- சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) சார்பில் சஞ்சய் ராவத்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம்.ஏ.பேபி
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் மஹுவா மாஜி
- தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) சார்பில் சுப்ரியா சுலே
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இ.டி.முகமது பஷீர் ஆகியோர் மனுதாரர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இவ்வாறு 10 கட்சிகளைச் சேர்ந்த 11 தலைவர்கள் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், அண்மையில் இந்தியா கூட்டணியில் இணைந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அல்லது அக்கட்சியின் பிரதிநிதிகள் யாருடைய பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.
காபி குடித்தது மட்டும் போதுமா? தயாநிதி மாறன் கேள்வி
இந்தப் பின்னணியில்தான் திமுக எம்.பி. தயாநிதி மாறன் உச்ச நீதிமன்ற மனுதாரர்கள் பட்டியலைப் பகிர்ந்து விஜய்யை விமர்சித்துள்ளார்.
தயாநிதிமாறன் தமது எக்ஸ் பதிவில், “பாசிசம் பாயாசம் எனப் பஞ்ச் பேசும் நடிகர் பெயர் இதிலும் காணவில்லையே? என்ன ஆச்சு?
சாதாரணமாக பேசும் போது ஒன்று சொல்லுவார்கள், வா, போ, பேசு, அப்படியே வந்தாலும் ஒரு காபி தரேன் சாப்பிட்டு போ, அதற்கு மேலே எதையும் கேட்காதே என்பார்கள்… அப்படிதான் இதையும் பார்க்க வேண்டும் போல…
பழக்க வழக்கமெல்லாம் பனையூருக்கு வந்து காபி சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பாசிச எதிர்ப்புக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீர்கள் என செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா?
காங்கிரஸ் உள்ளிட்ட துரோகிகள் கழண்டுகொண்ட பின்பும், இடைத்தேர்தலில் கழகத்தின் வாக்கு சதவீதம் அப்படியே இருப்பதைப் பார்த்து, நீங்கள் வாக்குவங்கியில்லாத டம்மிபீஸ்கள்தான் எனும் ‘கம்பெனி சீக்ரட்’ டம்மி முதலமைச்சருக்கே தெரிந்துவிட்டதோ!” என கிண்டலடித்துள்ளார்.
திமுகவின் விமர்சனம்
இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “பழக்க வழக்கமெல்லாம் பனையூருக்கு வந்து காபி சாப்பிடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பாசிச எதிர்ப்புக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீர்கள் என செவிட்டில் விசிலடித்து அனுப்பிவிட்டாரா?” என விமர்சிக்கப்பட்டுள்ளது.
