ரூ.35க்கு மின் கொள்முதல்: அரசை விளாசும் தலைவர்கள்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்குக் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இவ்வளவு விலைக்கு மின்சாரத்தைக் கொள்முதல் செய்வது ஒட்டுமொத்த மின்வாரியத்தின் நிர்வாகத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. 

இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

ADVERTISEMENT

திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,  ” திமுக ஆட்சிக்காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று சொல்லி டெண்டரை ரத்து செய்த இந்த Circus அரசு, இன்றைக்கு 1 Unit மின்சாரத்தை மிக மிக அதிக விலைக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இப்படி அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகிறது என்றால், அந்த அளவிற்கு நிர்வாகத்திறனில் inefficient ஆக இருக்கிறார் இந்த Dummy முதலமைச்சர்.

ADVERTISEMENT

இப்படி கொள்ளை அடிக்கத்தான், ‘காற்று அடிக்கவில்லை – மழை வரவில்லை – பஞ்சாப்ல கூட இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு’ என்றெல்லாம் கட்டுக்கதைகளைச் சொல்லி இத்தனை நாட்களாக இந்த ஆட்சியாளர்கள் செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா?

இந்த ஊழல் deal முடிக்கத்தான் பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கிறாரா பஞ்ச் டயலாக் சி.எம்?

ADVERTISEMENT

ஏற்கனவே மின் கட்டணம் என்கிற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் இந்த வெட்கங்கெட்ட சர்க்கார், அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து அதையும் பொதுமக்கள் தலையில் கட்டப் போவதை ஒரு போதும் ஏற்க முடியாது.

விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு போய் நிறுத்தியுள்ள இந்தக் கோமாளிக்கூட்டம், இன்னும் எத்தனை தூரம் மக்களை வதைக்கவிருக்கிறது.

மாற்றம் மாற்றம் என்று சொல்லி, நாட்டின் நம்பர் 1 டுபாக்கூராக மாறி நிற்கும் இந்த முதலமைச்சருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். 

திமுக முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,  ”மிகக் குறைந்த விலையில் செய்யப்பட்ட முந்தைய ஒப்பந்தங்களை ரத்துசெய்த பிறகு, ஒரு யூனிட்டுக்கு 35 என்ற விலையில் கொள்முதல் செய்வது என்பது, நிர்வாகம்/திட்டமிடலில் உள்ள  மிகமோசமான திறமையின்மையோ அல்லது மாபெரும் ஊழலோ ஆகும்.  அல்லது இரண்டுமேயாக இருக்கலாம்” என்று விமர்சித்துள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”தமிழ்நாடு மின்சார வாரியம் வரலாற்றிலேயே இல்லாத வகையில் யூனிட் ஒன்றுக்கு சராசரியாக 35 ரூபாய் என்ற மிக, மிக அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.

ஏற்கனவே தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மின்சார வாரியம் கடன் சுமையால் தள்ளாடுகிறது என்றும், முந்தைய ஆட்சியில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி, மின் கணக்கீட்டில் மாறுதல் செய்கிறோம் என்று ஏற்கனவே ரூ.1500 மின் கட்டணம் செலுத்தி வந்த தமிழக மக்கள் தற்போது சுமார் ரூ.4,000 வரை கட்டுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், இந்த அதிக விலையில் மின் கொள்முதல் செய்ய போடப்பட்ட ஒப்பந்தம், தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேலும் கடன் சுமையில் மூழ்கடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தேர்தலுக்கு முன் தனது சொகுசுப் பேருந்தில் மேல்புறத்தில் இருந்து வசனம் பேசிய நடிகர் விஜய், எழுதிக் கொடுத்த வசனத்தை, அதாவது மின்சார வாரியத்தைப் பற்றி பேசும்போது, ‘டெண்டர்’ என்ற வார்த்தையை மிக அழகாக, தொண்டை நரம்பு தெறிக்குமளவிற்கு, ஏற்ற இறக்கத்துடன் பேசி கைத்தட்டலை பெற்று, ஆட்சியைப் அமைத்த ஜோசப் விஜய், மின் பற்றாக்குறை அவசர நிலையை பயன்படுத்தி, ஏற்கனவே யுனிட் ஒன்றிற்கு ரூ.11-20 கொள்முதல் பொடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சராசரி யூனிட் ஒன்றுக்கு ரூ.35 வரை அதிக விலைக்கு ‘மின் கொள்முதல் ஒப்பந்தம்’ செய்வதில் மிகப் பெரிய ‘மெகா ஊழல்’ நடைபெற்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்தவுடன் ‘வெற்றி மெகா வசூல் திட்டத்தை’ தொடங்கிவிட்டதாக மக்கள் பரவலாக பேசுகின்றனர்.

ஏற்கனவே பல லட்சம் கோடி கடனில் மிதக்கும் தமிழக மின்சார வாரியத்தை மேலும் கடனில் மூழ்கடித்து கடைசியில் தனியாருக்கு தாரை வார்க்க இந்த அரசு திட்டமிடுகிறதோ என்ற ஐயம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அநியாய விலைக்கு தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கும் இந்த ஒப்பந்தத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த ஒப்பந்தத்தை இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share