ஆந்திர கனகதுர்கா கோயிலில் விஜய் தரிசனத்தின் போது நடந்த ‘அந்த’ 4 சம்பவங்கள்!

Published On:

| By Mathi

Andhra-Vijay-Temple

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா அம்மன் கோயிலில் தமிழக முதல்வர் விஜய் நேற்று (அக்டோபர் 13-ந் தேதி) சாமி தரிசனம் செய்தார். அப்போது சில சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திப்பதற்காக நேற்று விஜயவாடா சென்ற விஜய், முதலில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கனகதுர்கா அம்மன் கோயிலுக்குச் சென்றார். அங்கு அவருக்குக் கோயில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

ADVERTISEMENT

குங்குமம் வைக்கத் தடுமாறிய அர்ச்சகர்

கோயிலில் தரிசனம் முடிந்ததும் அர்ச்சகர் ஒருவர் விஜய்யின் நெற்றியில் குங்குமம் வைக்க முயன்றார். அப்போது அவர் சற்றுத் தடுமாறினார். உடனே முதல்வர் விஜய், அர்ச்சகரின் கையைத் தானே பிடித்து தனது நெற்றியில் குங்குமம் வைக்க உதவினார்.

விஜய்க்கு மாலை அணிவிக்காத அர்ச்சகர்கள்

கனகதுர்கா கோயிலில் முக்கியப் பிரமுகர்களுக்கு வேத ஆசீர்வாதம் வழங்குவதற்கு முன்பு பூமாலை அணிவிப்பது வழக்கம். ஆனால் விஜய்க்கு அர்ச்சகர்கள் பூமாலை அணிவிக்கவில்லை. விஜய்யின் பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலின்படியே மாலை அணிவிப்பது தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அம்மன் வஸ்திரத்தை கையில் வாங்கிய விஜய்

கோயிலில் தரிசனம் முடிந்ததும் முக்கிய பிரமுகர்களுக்கு அம்மனின் சேஷ வஸ்திரத்தைக் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். ஆனால் விஜய் அந்த வஸ்திரத்தைக் கழுத்தில் அணிவித்துக்கொள்ளாமல் தனது கையிலேயே பெற்றுக்கொண்டார்.

ஜென்ம நட்சத்திரத்தைக் கூறி பூஜை

கனகதுர்கா அம்மன் கோயிலின் பிரதான சன்னிதியில் விஜய் தனது பெயரையும் ஜென்ம நட்சத்திரத்தையும் அர்ச்சகர்களிடம் கூறி பூஜை செய்துள்ளார். பின்னர் கோயிலின் ஸ்தானாச்சாரியார் சிவபிரசாத் சர்மா, தலைமை அர்ச்சகர் துர்காபிரசாத் ஆகியோர் விஜய்க்கு வேத மந்திரங்கள் முழங்க ஆசீர்வாதம் வழங்கினர். அப்போது வழக்கமாக முக்கியப் பிரமுகர்கள் அமருவதற்குப் பயன்படுத்தப்படும் பீடத்தை ஒதுக்கிவைத்துவிட்டு விஜய் தரையில் அமர்ந்து ஆசீர்வாதம் பெற்றார்.

ADVERTISEMENT

கோயிலுக்குள் விஜய் சென்றபோதும், தரிசனம் முடிந்து திரும்பியபோதும் அங்கு வரிசையில் காத்திருந்த பக்தர்கள், ‘சிஎம்… சிஎம்…’ என்று முழக்கமிட்டனர். விஜய் அவர்களை நோக்கிக் கையசைத்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share