டெல்லியில் போராட்டம் நடத்திய ‘காக்ரோச் ஜனதா கட்சி’ தலைவர்கள் அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இருவருக்கும் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் திமுக வழங்கும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 14-ந் தேதி) தமது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
இந்த அரசால் இன்னும் எத்தனை போராட்டக்காரர்களை கைது செய்ய முடியும்? பாஜகவால் இன்னும் எத்தனை இளைஞர்களின் குரலை ஒடுக்க முடியும்?
இளைஞர்களை எந்த அளவுக்குச் சிறையில் அடைக்கிறார்களோ, அந்த அளவுக்கு எந்த அரசியல் கட்சியையும் சாராத சாதாரண மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள். மக்கள் சக்தியின் உண்மையான பலம் என்ன என்பதை இந்த அரசுக்குக் காட்டுவார்கள்.
அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் ஆகியோருக்கு எங்களது முழு ஆதரவு உண்டு. அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் திமுக வழங்கத் தயாராக இருக்கிறது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், டெல்லியில் போராட்டங்கள் நடைபெறும் முக்கிய இடமான ஜந்தர் மந்தரை, போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்களின் பட்டியலிலிருந்து அக்டோபர் 12-ந் தேதி டெல்லி போலீசார் நீக்கினர்.
இதற்கு காக்ரோச் ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 13-ந் தேதி காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர்கள் அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ், அஜிங்க்ய ஷிண்டே உள்ளிட்டோர் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி, பூட்டப்பட்ட இரும்புக் கதவு வழியாக ஜந்தர் மந்தர் பகுதிக்குள் நுழைந்தனர்.
அங்கு தேசியக் கொடியை ஏந்தி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர்.
இதையடுத்து அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் உள்ளிட்டோரை டெல்லி போலீசார் கைது செய்தனர். பின்னர் அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் ஆகிய இருவரையும் 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த கைதுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இருவருக்கும் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் திமுக வழங்கும் என அறிவித்துள்ளார்.
