அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக, தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு அதிமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், அதிமுகவின் சொத்துகளை எடப்பாடி பழனிசாமி அபகரிப்பதாகவும், அவரது தலைமையில் அதிமுக ஒரு லெட்டர் பேடு கட்சியாக மாறிவிட்டதாகவும் விமர்சித்திருந்தார்.
இந்தக் கருத்துகள் எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுகவுக்கும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து, அமைச்சர் நிர்மல்குமார் தனது கருத்துகளைத் திரும்பப் பெற்று, பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதிமுக சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக வழக்கறிஞர்கள் அணிச் செயலாளர் இன்பதுரை எம்.பி. தமது எக்ஸ் பதிவில், “சட்டம் மற்றும் மின்துறை அமைச்சர் திரு. C.T.R. நிர்மல்குமார் தெரிவித்த பொய்யான, அவதூறான குற்றச்சாட்டுகளை 7 நாட்களுக்குள் திரும்பப் பெற்று, பொதுவெளியில் அவர் மன்னிப்புக் கோரி, ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக சார்பில், சட்டமன்ற கொறடா திரு. அக்ரி. கிருஷ்ணமூர்த்தி பெயரில் சட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
