ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Kavi

தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் காஷ்மீரில் கூட ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கும் போது அமைதி பூங்கா என்று சொல்லப்படும் தமிழகத்தில் ஏன் அனுமதி வழங்கப்படுவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் மாநில செயலாளர் ஜெகதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

அதில், “ஆர்.எஸ்.எஸ் நிறுவன நாளை முன்னிட்டு பேரணி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று டிஜிபியிடம் விண்ணப்பித்தேன். அக்டோபர் 18, 25, நவம்பர் 1 ஆகிய ஏதேனும் ஒரு தேதியில் ஊர்வலம் நடத்த அனுமதி வேண்டும் என்று அளித்த விண்ணப்பத்தின் மீது இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பு இன்று (அக்டோபர் 14) விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.எல்.ராஜா , ‘ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அனுமதி மறுக்கப்படுகிறது’ என்று கூறினார்.

காவல்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயன், ‘அனுமதி கோரி 21 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் அக்டோபர் 3ஆம் தேதி தான் விண்ணப்பிக்கப்பட்டது. அதுபோன்று ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கும் வழித்தடம் அனுமதி அளிக்க முடியாத பகுதியாக உள்ளது. விழா காலத்தில் அனுமதி அளித்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து நீதிபதி, ஒவ்வொரு ஆண்டும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது. இருந்தாலும் அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு திராவிடர் கழகம், திமுக, அதிமுக, ஆர் எஸ் எஸ் என அனைவருக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அவர், தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் காஷ்மீரிலேயே ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்படும் போது அமைதி பூங்கா என்று சொல்லப்படும் தமிழகத்தில் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது. அனுமதியை மறுத்து தேவையற்ற விளம்பரத்தை அரசு ஏற்படுத்தித் தருகிறது என்றும் தெரிவித்தாஅட்.

இந்த விவகாரம் தொடர்பாக அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யனுடன் பேச்சுவார்த்தை நடத்த மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி வழக்கை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share