‘சோறுதான் திங்குறாரா?’ அமைச்சர் வெங்கடரமணனுக்கு சவால் விட்ட திமுக

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் விலைவாசி உயர்வு இல்லை என்று அமைச்சர் வெங்கடரமணன் பச்சையாக பொய் சொல்கிறார் என திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது. தமிழகத்தில் ஆளும் தவெக அரசிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதுகுறித்து கருத்து தெரிவித்துளளனர். இந்நிலையில், உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன், “தமிழகத்தில் அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களின் விலை உயரவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன், “அமைச்சர் அரிசி விலை உயரவில்லை என்கிறார்; அவர் அரிசி வாங்கிச் சோறு திங்குறாரா என்று தெரியவில்லை! அவர் ஒரு ஆடிட்டராக இருந்தவர்; அவருக்குக் கஷ்டம் என்ன தெரியும்? பாவம், அவர் கடையில் சென்று பையைப் பிடித்து அரிசி வாங்கியிருந்தால் தெரியும். சாதாரண சாமானிய மக்கள் அரிசி வாங்குவதால், அவர்களுக்கு அந்த கஷ்டம் தெரியும். அதனால்தான் நான் கேட்கிறேன்; அவர் அரிசி போட்டுச் சோறு திங்குறாரா என்று கேட்கிறேன்.

நான் உணவுத் துறை அமைச்சரைச் சவாலுக்கு அழைக்கிறேன். அவர் இருக்கும் மயிலாப்பூருக்கு நான் வருகிறேன். அவருக்கு வசதியான நேரத்தைக் கேட்டுக்கொள்ளுங்கள்; இருவரும் பையை எடுத்துக்கொண்டு மளிகைக் கடைக்கும், காய்கறிக் கடைக்கும் சென்று பொருட்களை வாங்கலாம். உள்ளபடியே விலை உயர்ந்திருக்கிறதா இல்லையா என்பது அப்போது தெரியும். இதை நான் ஓபன் சேலஞ்சாகவே சொல்கிறேன்.

ADVERTISEMENT

அவர் விலை ஏற்றம் இல்லை என்று பச்சைப் பொய்யைச் சொல்கிறார்; ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய்யைச் சொல்கிறார். நாள்தோறும் பத்திரிகைகளில் விலைவாசி உயர்வு குறித்த விவரங்கள் வருகின்றன. ஆனால், எதைப் பற்றியும் அக்கறை இல்லாத இந்த அரசாங்கம், ரீல்ஸ் (Reels) எடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. வாய்க்கு வந்தபடி பொய் சொல்வதை வாடிக்கையாக வைத்துக்கொண்டு, இன்று விலை ஏற்றம் இல்லை என்கிறார்கள்.

ஒரு பக்கம் தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துள்ளது. இன்னும் கொஞ்ச நாட்களில் தீபாவளிப் பண்டிகை வரப் போகிறது; இந்தத் தீபாவளிப் பண்டிகையை மக்கள் எப்படிக் கொண்டாடப் போகிறார்கள் தெரியவில்லை? உடனே திமுகவிற்கு தீபாவளி மேல் என்ன அக்கறை? யாருக்கும் இல்லாத அக்கறை என்ன? என்று வியாக்கியானத்திற்கு வராதீர்கள். இது சாமானிய, சாதாரண மக்களின் பிரச்சினை. பண்டிகைக் காலங்களில் பொருட்களை வாங்க இயலாத அளவிற்கு மக்கள் கஷ்டப்படும் நிலை உள்ளது.

ADVERTISEMENT

ஒரு பக்கம் விலைவாசி உயர்ந்துள்ளது; ஒரு பக்கம் மின்சார விலை உயர்ந்துள்ளது; மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற உடனே முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் எல்லாம் முதல்வரின் அறையில் ஒரு சைகையைக் காட்டினார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சைகையைக் காட்டினார்கள். கொளத்தூரில் வெற்றி பெற்றவுடன் ஒரு சைகையைக் காட்டினார்கள். அது என்னவென்றால், ‘சிஎம் சார், நீங்கள் தமிழ்நாட்டை முடித்துவிட்டீர்கள்; சுத்தமாக முடித்துவிட்டீர்கள்; சாதாரண சாமானியர்களின் வயிற்றில் அடித்துவிட்டீர்கள்; விலைவாசியைத் டாப் ரேட்டுக்கு கொண்டு போய்விட்டீர்கள்’ என்பதுதான். தமிழ்நாட்டில் நம்பர் ஒன், நம்பர் ஒன் என்று முழக்கமிட்டீர்களே, இன்று விலைவாசியில் தமிழ்நாடு நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது! இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் எதில் என்றால், விலைவாசி உயர்வில்தான்!” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share