எ.வ. வேலுவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை : காவல்துறை விளக்கம்! 

Published On:

| By Kavi

முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி திருவண்ணாமலையில் நடந்த திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாட்டுக்கு, மலப்பம்பாடி ஏரியிலிருந்து சட்டவிரோதமாக மண் எடுத்ததாகவும் இதனால் அரசுக்கு 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தது. 

ADVERTISEMENT

இந்த புகாரின் அடிப்படையில் எ.வ. வேலு அவரது மகன் எ.வ. குமரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இந்த சூழலில் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர்-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று எ.வ. வேலு, எ.வ. குமரன் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

ADVERTISEMENT

இதை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

இதற்கிடையே எ.வ. வேலு,  எ.வ. குமரன் இருவரும் தங்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். 

ADVERTISEMENT

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நீதிபதி லட்சுமி நாராயணன் முன் வந்தது. 

அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் ஆஜராகி, “இந்த வழக்கில் எ.வ. வேலுவுக்கு  எதிராக எந்த லுக்அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார். 

மேலும், எ.வ. குமரன் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

இதை பதிவு செய்த நீதிபதி லட்சுமி நாராயணன், எ.வ. வேலு தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார். 

எ.வ.குமரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நாளை அக்டோபர் 15ஆம் தேதிக்கு  ஒத்தி வைத்தார்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share