அரசியலில் முக்கிய முடிவு… சீறிய சி.வி.சண்முகம்

Published On:

| By Kavi

இடைத்தேர்தல் தோல்வி குறித்து அதிமுக எம்எல்ஏக்களுடன் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆலோசனையில் ஈடுபட்டார். 

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திக்கும் அதிமுக, தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. 

ADVERTISEMENT

சமீபத்தில் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. 

இதனால், அதிமுகவில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. 

ADVERTISEMENT

சிலர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். 

இந்த சூழலில் இன்று(அக்டோபர் 14) சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அலுவலகத்துக்கு மூன்று அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்தனர். 

ADVERTISEMENT

அவர்களுடன் சி.வி சண்முகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘இது என்னுடைய வழக்கறிஞர் அலுவலகம். இங்கு நாங்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இதில் என்ன இருக்கிறது. நேற்று கூட நான் இங்கு வந்தேன் நீங்கள் வரவில்லை’ என கூறினார்.

கேள்வி பதில்

அரசியலில் முக்கிய முடிவு எடுக்கப் போவதாக சொல்கிறார்களே? 

நான் என்ன முடிவெடுக்க வேண்டும். உங்களுக்காக ஏதாவது முடிவு எடுக்க வேண்டுமா என்ன.

அதிமுக பொதுச் செயலாளர் மீது அதிருப்தியில் இருக்கிறீர்களே…

இதெல்லாம் தெரிந்த விஷயம் தானே பிறகு என்ன. இது புது விஷயமா என்ன. கருத்து வேறுபாடு இருக்கிறது என்பது தெரிந்த விஷயம் தானே.

இடைத்தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு போயிருக்கிறது. இந்த தோல்வியை எப்படி பார்க்கிறீர்கள்? 

இது ஒரு மோசமான தோல்வி. இதை அதிமுக தலைமை கூர்ந்து ஆலோசனை செய்ய வேண்டும். தோல்விக்கு என்ன காரணம் என்பதை கலந்தாலோசித்து அதை சீர்திருத்தி, மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறோம். பொதுக்குழுவைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறோம். 

உங்களுடைய கோரிக்கையை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா ? அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? 

அதிமுக தொண்டர்களுக்கு தேவை ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையை கொடுத்தால் அதிமுகவை மீட்டெடுக்கலாம். இது மிகவும் முக்கியமானது. 

நீங்கள் இதற்கான முயற்சியை எடுக்கிறீர்களா? 

நான் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. பொறுப்பில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுத்தால் அதற்கு நாங்கள் துணை இருந்து உழைப்பதற்கு தயாராக இருக்கிறோம்.. 

கடந்த காலங்களில் அதிமுகவுக்கு இது போன்று சோதனைகள் வரும் போது நீங்கள் உடன் இருந்தீர்கள். இப்போது நீங்களே இப்படி சொன்னால் எப்படி? 

இந்த இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்து வலுப்படுத்த வேண்டும். அதற்கு அனைவருடனும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்தால் அதற்கு நாங்களும் துணை இருந்து ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம்.  அவ்வளவுதான் சொல்ல முடியும். 

அனைவரையும் அரவணைத்து கொண்டு சென்றால் எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்து அதிமுகவை மீண்டும் கொண்டு வரலாம். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share