ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் சேகர்பாபுவுடன் தவெக எம்.எல்.ஏ. வாக்குவாதம்!

Published On:

| By Mathi

Chennai-Sekarbabu-TVK

சென்னையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் தவெக எம்.எல்.ஏ. தாமுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நேற்று (அக்டோபர் 14-ந் தேதி) பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் வெங்கட்ராமன், பிரபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு எம்.எல்.ஏ., தவெக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு வந்த சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோரை தவெக அமைச்சர்கள் எழுந்து நின்று வரவேற்றனர். பின்னர் இருவரும் அமைச்சர்களுக்கு நடுவே அமர வைக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

அப்போது சேகர்பாபு பேசிக்கொண்டிருந்தபோது, ராயபுரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. தாமு குறுக்கிட்டு, “சேகர்பாபு நீண்ட நேரம் பேசுவது போரடிக்கிறது” என கூறினார்.

ADVERTISEMENT

இதனால் கோபமடைந்த சேகர்பாபு, தன்னை எதற்காகக் கூட்டத்திற்கு அழைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அத்துடன், தாம் ஏற்கெனவே அமைச்சராகப் பணியாற்றியதையும் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சேகர்பாபுவைத் தொடர்ந்து பேசுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், முதலில் தாமுவைக் கட்டுப்படுத்துமாறு சேகர்பாபு வலியுறுத்தியதால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இக் கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, கடந்த 4 ஆண்டுகளில் சென்னையில் மழைநீர் வடிகால் மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சுமார் 1,500 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழையின்போது மழைநீர் தேங்குவதைத் தடுப்பது, வடிகால்களைப் பராமரிப்பது, தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share