SIR-க்கு எதிராக ‘இந்தியா கூட்டணி’ நடத்திய போராட்டத்தில் முதல்வர் விஜய்யின் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பங்கேற்று பேசிய அமைச்சர் ராஜ்மோகன், பாஜகவையோ மத்திய அரசையோ குறிப்பிட்டு கண்டனம் தெரிவிக்கவில்லை.

சென்னை எழும்பூரில் இன்று (அக்டோபர் 15-ந் தேதி) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: ஸ்பெஷல் இன்டென்சிவ் ரிவிஷன் (SIR) என்ற நடைமுறை இந்தியாவின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு என்பது எங்களுக்குப் பழக்கமே கிடையாது.
நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பிருந்தே இந்த எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை எதிர்த்து வருகிறோம். தமிழ்நாட்டில் அல்ல. பீகாரில் எஸ்.ஐ.ஆர். திணிக்கப்பட்டபோதே அதை எதிர்த்த கழகம் தமிழக வெற்றிக் கழகம் என்பதை இந்த இடத்தில் வாஞ்சையோடு குறிப்பிட்டுக்காட்டுகிறேன்.

முதல் சுற்றிலேயே 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டபோது நாங்கள் அதைக் கண்டு அதிர்ந்தோம். அதை எதிர்த்து அறிக்கைகள் வெளியிட்டோம். மக்கள் மன்றத்தில் பேசினோம்.
ஏன், இந்தியாவினுடைய தலையெழுத்தைத் தீர்மானிக்கக்கூடிய கடைக்கோடி இந்தியனின் கடைசி நம்பிக்கையாக இருக்கக்கூடிய இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி அதற்காக வாதாடி வருகிறோம். இந்த 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதும், பின்னர் சேர்க்கப்பட்டதும் போன்ற நடவடிக்கைகள் எப்போதெல்லாம் எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் நடைபெற்றதோ, அப்போதெல்லாம் இது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதை எடுத்துச் சொல்லி வருகிறோம்.
இந்த மேடையில் பெரியவர்கள் இருக்கிறார்கள். எங்கள் அண்ணன்கள் இருக்கிறார்கள். அண்ணா, நீங்கள் வழிகாட்டுங்கள். உங்கள் வழியில் நடந்து வருவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தூய தொண்டர்களுடன் நாங்கள் காத்திருக்கிறோம்.
நாங்கள் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள். ஒரே உரிமைக் குரலுக்காக ஓங்கி ஒலிக்கக்கூடிய இரட்டைக் குழல் துப்பாக்கியாக அண்ணன் மாணிக்கம் தாகூரோடு நாங்கள் நின்றுகொண்டிருக்கிறோம்.
பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார்.. “Democracy is not only a mere form of government, it is associated living.” அதாவது, ஜனநாயகம் என்பது ஒரு ஆட்சி முறை மட்டும் இல்லை. அது அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழக்கூடிய வாழ்க்கை முறை என்று அண்ணல் அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார்.
அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழக்கூடிய இந்த வாழ்க்கை முறையில் ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை இருக்கிறது. அந்த ஒவ்வொருவருடைய வாக்குரிமையும் அவர்களுக்கான வாழ்க்கை உரிமை, வாழ்வுரிமை. அனைவரையும் உள்ளடக்கிய அந்தத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக இந்த எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் நாங்களும் ஒருவர். குறிப்பாக 30 வயதுக்குட்பட்டவர்கள், பெண்கள், இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், எளிய மக்கள், ஏழை மக்கள், பெரிய வசதி வாய்ப்பு இல்லாதவர்கள், சாமானியர்கள், முதல்முறை வாக்காளர்கள் ஆகியோரைத் திட்டமிட்டு இந்த எஸ்.ஐ.ஆர். மூலம் நீக்கம் செய்திருக்கிறார்கள். ஒருவேளை இந்தப் பெண்களும் ஒடுக்கப்பட்டவர்களும் ஏழை மக்களும் முதல்முறை வாக்காளர்களும் நீக்கப்படாமல் இருந்திருந்தால், இன்னும் அதிக இடங்களில் அதிகப் பெரும்பான்மையோடு தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும்.
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையைப் பொறுத்தவரை அன்றிலிருந்து இன்று வரை, இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் விரோதமாக இருக்கக்கூடிய, அண்ணல் அம்பேத்கர் தந்த ஜனநாயகத்திற்கு எதிராக இருக்கக்கூடிய இதை நாங்கள் எதிர்க்கிறோம். அன்றும் எதிர்த்தோம். இன்றும் எதிர்க்கிறோம்.
இப்படி ஒன்றுபட்டு நிற்கக்கூடிய இந்த முன்னணியைப் பார்க்கும்போதே என் நெஞ்சமெல்லாம் நெகிழ்கிறது. இங்கிருக்கக்கூடிய ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த தோழர்களும் அவர்களுடைய கொடியை ஓங்கிப் பிடித்து வீரநடை போட்டு வருகிறார்கள். மக்களுக்காக அவர்கள் போராடுகிறபோது, எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்புகிறபோது எத்தனை மகிழ்ச்சி வருகிறதோ, அதேபோல இந்தப் பலவண்ணக் கொடிகளும் ஒன்றாகச் சேர்ந்து தலைவர்கள் முன்னால் ஓங்கி உயர்ந்து வானத்தைத் தொடுகிறபோது உண்மையிலேயே எனக்கு நெஞ்சம் நெகிழ்கிறது. இந்த ஒற்றுமை தொடர வேண்டும். மக்களின் உரிமைகளை மீட்பதற்காக எழுந்திருக்கக்கூடிய இந்த ஒற்றுமை தொடர வேண்டும்.
SIR ஒரு தீமை. உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருக்கக்கூடிய இந்தியாவில் தேர்தல் என்பது ஒரு பெரிய ஜனநாயகப் பரிசோதனை. அந்த பெரிய ஜனநாயகப் பரிசோதனையின் வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில், அதன் உண்மைத்தன்மையையும் உறுதித்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், அதை அசைத்துப் பார்க்கும் வகையில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். இன்னும் பல கருத்துகளைச் சொல்ல வேண்டும். இந்தக் கொடிய எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை தமிழக வெற்றிக் கழகம் அன்றும் எதிர்த்தது. இன்றும் எதிர்க்கிறது. என்றுமே எதிர்க்கும். ஜனநாயகத்தை மீட்டெடுப்போம். வாருங்கள். எங்கள் முதல்வர் சொல்கிற மாதிரி, கான்ஃபிடென்ட்டாக இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.
