இந்தியா கூட்டணி நடத்தும் “ஜனநாயகம் காப்போம்” கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் இன்று (அக்டோபர் 15) நடைபெற்று வருகிறது.
இதில், பெ.சண்முகம், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
அப்போது பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ”கொளத்தூர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. தேர்தலுக்கு முன்பே இந்த தகவல் கிடைத்து முன்னாள் முதல்வரின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றேன்.
முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிடம் இதை எடுத்துச் சொன்னேன். யாரோ ஒரு பெண்மணி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சதி நடக்கிறது கொளத்தூரிலே முதலமைச்சர் வெற்றி பெறுவது கடினம் என்றார்.
நான் முதலில் அதை அலட்சியப்படுத்தினேன்.
இரண்டாவது முறை, மூன்றாவது முறை அவர் சொல்லும்போது, இதை நான் நேரடியாக சிஎம் கிட்ட சொல்ல முடியாது. நான் ஒருவரை அறிமுகம் செய்து வைக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் அவரிடம் பேசுங்கள் என்று சேகர்பாபுவோடு ஒரு கனெக்சன் ஏற்படுத்திக் கொடுக்கிறேன்.
அண்ணன் சேகர்பாபுவிடம் அந்த அம்மா பேசினார். அவர் நேரில் வர சொல்லி பேசுகிறார்.
அதன் பிறகு, அன்றைய முதலமைச்சரை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் நான் சொன்னேன். அண்ணன்… கொளத்தூரிலே இந்த மாதிரி ஒரு பிரச்சனை இருக்கிறது என்று சொல்கிறார்கள். நீங்கள் ஏன் தொகுதி மாறி நிற்கக்கூடாது என்று கேட்டேன்.
அண்ணன் சேகர்பாபு கிட்ட இதை சொல்லி இருக்கிறேன் என்றேன். அப்போது அவர் அதெல்லாம் ஒன்றும் இல்லை. பி.எல்.ஒ போட்டு கரெக்டா எல்லாம் செய்து கொண்டு இருக்கிறோம். அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறினார்.
தேர்தல் நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே இந்த எச்சரிக்கை நம்முடைய கவனத்திற்கு வந்தது அதைச் சொல்வதற்காக நான் சொல்லுகிறேன்.
யார் மீதும் குற்றச்சாட்டு சொல்வதற்காக அல்ல. குற்றச்சாட்டு நோக்கில் நான் சொல்லவில்லை. எச்சரிக்கை செய்வதற்காக அன்றைய முதலமைச்சரிடத்திலேயே நேரிலே சொன்னேன்.
உங்களை குறி வைப்பதாக தகவல் வந்திருக்கிறது. அதை நீங்கள் சரி பார்க்க வேண்டும் என்றேன்.
சேகர்பாபுவை மறுபடியும் பார்த்து சொன்னேன். இதற்கு அவர், முழுமையாக சரிபார்க்கப்பட்டது. எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார். ஆனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த தொகுதியில் நீக்கப்பட்டியிருக்கிறார்கள்.
அதிலே இறந்து போனவர்கள் 20,000 பேர். எஞ்சியவர்கள் ஷிப்டெட் என்கிற பெயரிலே நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். டூப்ளிகேஷன் என்கிற பெயரிலே நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். டார்கெட் செய்து குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள் .எல்லா மாநிலங்களிலும் இது நடந்திருக்கிறது.
இந்தியாவிலேயே மிக அதிகமாக நீக்கம் செய்யப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. 97 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேற்கு வங்கத்தை விட அதிகம். இதை நாம் ஆய்வு செய்ய வேண்டுமா வேண்டாமா?
இதிலே கவனம் செலுத்த வேண்டுமா வேண்டாமா? இதை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு எதிரான நடவடிக்கையா இது? இது தேசத்திற்கு எதிரான சதி அல்லவா? ஜனநாயகத்திற்கு எதிரான சதி அல்லவா? எப்படி ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும்?
ஈவிஎம்யைப் பயன்படுத்தி எஸ்.ஐ.ஆர். ஐப் பயன்படுத்தி தேர்தல் வெற்றிகளை திருடுகிற போக்கு எவ்வளவு ஆபத்தானது? எதிர்க்கட்சிகளை வீழ்த்துகிற போக்கு எவ்வளவு ஆபத்தானது? இந்த வயிற்றெரிச்சலோடுதான் இன்றைக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் கைகோர்த்து நிற்கிறோம்” என்று கூறினார்.
