வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக ராகுல் காந்தி, திருமாவளவன் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் தொடர்ந்த வழக்கில், “மனுதாரர்களில் ஒருவருடைய செயல்பாடு குறித்து விளக்கம் கேட்போம்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை நீதிபதி குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் SIR நடவடிக்கைகளால் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் தேர்தல் ஆணையத்தின் முடிவுகளை நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவில், SIR நடவடிக்கைகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகளுக்கான ஆவணங்களை வெளியிட வேண்டும்; வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களையும் அதற்கான காரணங்களையும் வாக்குச்சாவடி வாரியாகத் தெரிவிக்க வேண்டும்; உரிய நோட்டீஸ் வழங்காமல் வாக்காளர்களின் பெயர்களை நீக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை அனைத்து மாநிலங்களிலும் SIR பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று (அக்டோபர் 15-ந் தேதி) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்ய பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின்போதுதான் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்த ஒரு கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“We would also ask one of the petitioners about his conduct” என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். அதாவது, “மனுதாரர்களில் ஒருவருடைய செயல்பாடு குறித்தும் நாங்கள் விளக்கம் கேட்போம்” என்று கூறினார். அடுத்த விசாரணையின்போது அந்த மனுதாரரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தலைமை நீதிபதி யாரைக் குறிப்பிட்டார்? அந்த மனுதாரர் என்ன செய்தார்? எந்தச் செயல்பாடு குறித்து விளக்கம் கேட்கப்பட உள்ளது? என்ற விவரங்கள் எதையும் அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
ராகுல் காந்தியா?
இதனால், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களில் யாரை தலைமை நீதிபதி குறிப்பிட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பரபரப்பான விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
அக்டோபர் 12-ந் தேதி ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றது தொடர்பாகவும் தனியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்தப் பேரணி தொடர்பான மனுக்களிலும் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியுள்ளது. நீதிமன்றத்தை நோக்கி அரசியல் கட்சிகள் பேரணி நடத்துவது, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பது போன்ற குற்றச்சாட்டுகள் அந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ளன.
இதனால் தலைமை நீதிபதியின் கருத்து அக்டோபர் 12-ந் தேதி நடைபெற்ற பேரணியைத்தான் குறிக்கிறதா? அந்த பேரணிக்கு தலைமை வகித்த ராகுல் காந்தியைத்தான் குறிக்கிறதா? என்பதுதான் விவாதம்.
SIR வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அடுத்த விசாரணையில் எந்தத் தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது என்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
