தமிழகத்தின் முழு நேர ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ஆர்.வி. அர்லேகரை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (அக்டோபர் 15) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி கடந்த மார்ச் மாதம் மேற்குவங்க ஆளுநராக மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து, கேரள ஆளுநராக இருந்த ஆர்.வி. அர்லேகர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவரைத் தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஆர்.வி. அர்லேகர் இன்று தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 4 மணியளவில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆளுநரை நேரில் சந்தித்தார். அப்போது அவருக்குப் பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், முதலமைச்சருக்கு ஆளுநர் தரப்பில் நடராஜர் சிலை வழங்கப்பட்டுள்ளது.
