அன்பில் மகேஷ் கேஸ் டைரியை படிக்க வேண்டும் : உயர் நீதிமன்றம்!

Published On:

| By Kavi

அன்பில் மகேஷ் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். 

திமுக ஆட்சி காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கோரி 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்படாத தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டார். 

ADVERTISEMENT

இந்த வழக்கில் மத்திய குற்ற பிரிவு போலீசார் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மீதும் வழக்குப்பதிவு செய்து சோதனை மேற்கொண்டனர். 

இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு அன்பில் மகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

ADVERTISEMENT

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், இந்த மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது காவல்துறை சார்பில் “400 கோடி ரூபாய் பணம் கைமாறி உள்ளது. தனியார் பள்ளிகளிடமிருந்து நேரடியாக பணம் கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக அவர் முன் ஜாமீன் கேட்டுள்ளார். 

ADVERTISEMENT

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான முத்துக்குமாரை அன்பில் மகேஷ் தான் பாதுகாக்கிறார். இந்த முத்துக்குமாரின் கார் ஓட்டுனர் சுரேஷ் மூலமாகத்தான் பணம் பெறப்பட்டுள்ளது. 

இதற்கான புகைப்படங்கள், ஆதாரங்கள் உள்ளன. தற்போதைய நிலையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டால் விசாரணை பாதிக்கப்படும். வழக்கு தொடர்பான சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது. 

ஏற்கனவே அவரிடம் எட்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றாலும் அது போதுமானதாக இல்லை. தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என்று வாதிடப்பட்டது. 

அன்பில் மகேஷ் சார்பில், இனிமேல் விசாரணை நடத்த எதுவும் இல்லை. விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பு அளிக்க  தயார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி, அரசியலில் பிரபலமானவர்கள் எங்கு சென்றாலும் படம் எடுப்பார்கள். அதை எப்படி ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியும். அமைச்சராக இருந்த அவருக்கு டிபிஐ வளாகத்தில் அலுவலகம் இருக்கும். அந்த அலுவலகத்தில் அலுவலர்களை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை. அன்பில் மகேஷிடம் ஏற்கனவே 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.. 

மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றால் முதலில் நடத்தப்பட்ட விசாரணையில் அப்படி என்ன கேட்கப்பட்டது. 

அன்பில் மகேஷ் வழக்கின் கேஸ் டைரியை படித்துப் பார்த்துவிட்டு, வருகிற அக்டோபர் 26ஆம் தேதி அன்று இந்த மனு மீது முடிவை அறிவிக்கிறேன் என்று கூறி உத்தரவை ஒத்தி வைத்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share