கோவையில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில் பேசிய அமைச்சர் சம்பத்குமார், நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
கோவை காந்திபுரத்தில் இன்று (அக்டோபர் 16-ந் தேதி) பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் முதல்வர் விஜய் முன்னிலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் அமைச்சர் சம்பத்குமார் பேசியிருப்பதாவது: நமது முதல்வர் அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், முடியாது, நடக்காது, சாத்தியமில்லை என்று மற்றவர்கள் எதைப் பார்த்துப் பயந்து பின்வாங்கினார்களோ, அதைத்தான் உழைப்பின் மூலம், தளராத நம்பிக்கையின் மூலம் சாத்தியமாக்கிக் காட்டிக் கொண்டிருக்கும் மக்கள் தலைவர்.
இன்றைய தமிழக அரசியல் களத்தின் ‘முடியாது என்பது என் அகராதியில் இல்லை’ என்ற நெப்போலியனின் புகழ்பெற்ற வாசகத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் நமது தமிழக முதலமைச்சர். இவ்வாறு அமைச்சர் சம்பத்குமார் பேசினார்.
ரஜினியை மறைமுகமாக விமர்சித்தாரா?
இந்தப் பேச்சு, ”ரஜினிகாந்தை விமர்சித்த அமைச்சர் சம்பத்குமார்” என சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நீண்டகாலமாக அரசியலுக்கு வருவது குறித்து பேசி வந்தார். 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி, தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். பின்னர் 2020-ம் ஆண்டு டிசம்பரில், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்தார்.
இந்தப் பின்னணியில்தான், அரசியலில் மற்றவர்கள் பயந்து பின்வாங்கியதை விஜய் சாதித்துக் காட்டியிருப்பதாக அமைச்சர் சம்பத்குமார் பேசியது, ரஜினிகாந்தை மறைமுகமாகக் குறிப்பிட்டதாக நெட்டிசன்கள் விவாதிக்கின்றனர்.
ஜெயிலர் 2 வெற்றியால் டென்ஷனா?
ரஜினிகாந்த், விஜய் இடையே நீண்டகாலமாகவே அரசியல் மற்றும் சினிமா மேடைகளில் மறைமுகமான கருத்து மோதல்கள் இருந்து வருகின்றன. ரஜினிகாந்த் ஒரு குட்டிக் கதை சொன்னால், அதற்கு விஜய் இன்னொரு குட்டிக் கதை மூலம் பதிலடி கொடுப்பதாக ரசிகர்கள் விளக்கம் அளிப்பதும், இருவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
ரஜினிகாந்த் திரைப்படங்கள் வெளியாகும்போது விஜய் ரசிகர்களில் சிலர் அந்தப் படங்களை நெகட்டிவ்வாக விமர்சிப்பதும் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம்.
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முறை விஜய் ரசிகர்கள் படத்தைப் பற்றியோ, அதன் வெற்றிக் கொண்டாட்டங்களைப் பற்றியோ பெரிய அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தாமல் அமைதியாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
தற்போது, ‘ஜெயிலர் 2’ படத்தின் வெற்றி காரணமாக ஏற்பட்ட டென்ஷனின் வெளிப்பாடாகத்தான் அமைச்சர் சம்பத்குமார், ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்தாரா? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகிறது.
