நாகையில் தவெக நிர்வாகி வீட்டில் இருந்து ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகி பூபாலன் மற்றும் அவரது நண்பர் சுகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகன். இவர் வேளாங்கண்ணியில் ஒரு லாட்ஜை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த லாட்ஜை மையமாக வைத்து சட்டவிரோதச் செயல்களும், போதைப் பொருள் கடத்தலும் நடப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு (DRI) ரகசியத் தகவல் கசிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இன்று காலை சுகனின் வீட்டில் திடீர் சோதனையில் இறங்கினர். அப்போது அங்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், அதிநவீன மற்றும் வீரியமிக்க ‘மெத்தம் பெட்டமைன்’ போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சுகனும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து இந்தத் தடை செய்யப்பட்ட பொருளை இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமானது.
போலீசாரின் பிடியில் சிக்கிய சுகன், அவரது சகோதரர் மற்றும் நண்பர் ஆகிய மூவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தவெக நாகப்பட்டினம் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான பூபாலனின் தூண்டுதலின் பேரிலும், அவரது தொடர்புகளோடும்தான் இந்தத் கடத்தல் அரங்கேறியதாக வாக்குமூலம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, சிந்தாமணி கிராமத்தில் உள்ள வழக்கறிஞர் பூபாலன் வீட்டிலும் அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து சுமார் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள், பறிமுதல் செய்யப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மதிப்பு 100 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் லேப்டாப், பென்டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி உள்ளனர். மேலும் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடைய தவெக நிர்வாகி பூபாலன் மற்றும் அவரது நண்பர் சுகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, பூபாலனைத் தவெகவின் அடிப்படைப் பொறுப்பில் இருந்தே உடனடியாக நீக்கி நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் சுகுமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார்
