‘நகர்ப்புற மக்கள் சமூக அந்தஸ்துக்காக பொன்னி அரிசி சாப்பிடுகின்றனர்’ அமைச்சர் வெங்கடரமணன் பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது நான் பிறந்ததில் இருந்தே ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று தமிழ்நாட்டின் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
பொன்னி அரிசி நுகர்வு மற்றும் மக்களின் சமூக அந்தஸ்து குறித்து நீங்கள் பேசி இருப்பது எந்த நோக்கத்தின் அடிப்படையில் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் வெங்கடரமணன், மக்களுக்கு பிடித்தது என்று பெயர். சில இடங்களில் தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாறுபடும். நகர்ப்புற மக்களுக்கும் கிராமப்புற மக்களுக்கும் இடையேயான உணவுப் பழக்கவழக்கங்களில் வித்தியாசம் உள்ளது என்று தெரிவித்தார். மேலும், “ஒவ்வொரு ஊரிலும் உள்ள வாழ்க்கை முறை, குடிநீர் தன்மை மற்றும் துரித உணவுப் பண்பாடு (Fast Food Culture) ஆகியவற்றுக்கு ஏற்ப உணவுத் தேவைகளும் உணவு உற்பத்தியும் மாறுபடுகின்றன. என்றார்.
இதனைத் தொடர்ந்து “பொன்னி அரிசியை இத்தனை ஆண்டுகளாக சாப்பிடாதவர்கள், இந்த ஆட்சி வந்த பிறகுதான் சாப்பிட ஆரம்பித்ததாக நினைக்கிறீர்களா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர் நீங்கள் சொல்லுங்கள் நீங்கள் என்ன அரிசி சாப்பிடுகிறீர்கள்.. என்றதோடு அதை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் என்றார்.
மேலும் நீங்கள் என்ன அரிசி சாப்பிடுகிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, நான் ரேஷன் அரிசி சாப்பிடுகிறேன். நான் பிறந்ததில் இருந்து ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறேன் என்றார். குடும்ப அட்டையில் தான் வாங்குகிறேன் என்றார்.
உடனடியாக செய்தியாளர்கள் உங்கள் குடும்ப அட்டையின் நிறம் குறித்தும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், “இது குறித்துத் தனியாக ஆய்வு செய்து சொல்கிறேன். என்னை பற்றி தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரியும்.” என்றார்.
ஏழை மக்களுக்கு கிடைக்கும் ரேஷன் அரிசி உங்களுக்கு எப்படி கிடைக்கும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விவாதத்தை மீண்டும் பொதுவான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களுக்காக பிரியாணி சாப்பிடுவார்கள் சிலர் வார இறுதியில் மக்கள் ஆர்வமாக கடைக்கு செல்வார்கள். இது எல்லாம் ஒரு Happiness and Social Status. நான் கூட ஆட்சி அமைவதற்கு முன் பலமுறை குடும்பத்தோடு வெளியில் சென்று சாப்பிட்டு இருக்கிறேன். அது நம் குடும்பத்தோடு செலவு செய்யும் முக்கியமான நேரம்.
விடுமுறை நாட்களில் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வெளியே சென்று உண்பது என்பது பலருக்கு ஒரு மகிழ்ச்சியான தருணமாகவும், அவர்களின் சமூக அந்தஸ்து மற்றும் வாழ்க்கை முறையின் வெளிப்பாடாகவும் அமைகிறது” என விளக்கமளித்தார்.
