எடப்பாடி பழனிசாமியை முழுமையாக நம்புகிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி.
கோவை ஆர் எஸ் புரத்தில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக முக்கிய தலைவருமான எஸ்பி வேலுமணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘சென்னையில் உள்ள வீட்டுக்கு போகும்போது சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் எல்லாம் வந்து என்னை பார்ப்பது சகஜம்.
நான் ஒரு வாரமாக செய்தியாளர்களை சந்திக்கவில்லை. ஆனால் நீங்களாக, கூட்டம் நடக்கிறது என்று போடுகிறீர்கள்.
அதனால்தான் இன்று எம்எல்ஏ அலுவலகத்துக்கு வந்தேன். அப்படியே உங்களையும் சந்திக்கிறேன்.
அதிமுக எப்போதுமே ஒரு சிறந்த இயக்கம். 30 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்திருக்கிறோம்.
எங்களை எல்லாம் உருவாக்கிய இயக்கம். என்னுடைய உடம்பில் அதிமுக ரத்தம் தான் ஓடுகிறது.
ஆனால் என் வீட்டில் எம்எல்ஏ கூட்டம் நடக்கிறது… அந்த கூட்டம் நடக்கிறது, இந்த கூட்டம் நடக்கிறது என்று நீங்களாகவே ஏதோ ஒன்று போடுகிறீர்கள்.
சி.வி சண்முகம் என் வீட்டுக்கு வருவது புதியதா. நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட எல்லோரும் எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம்.
தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தது எங்களுக்கு வருத்தம் தான். மூன்று மாதத்திற்கு முன்பு தாராபுரம் மதுராந்தகத்தில் அதிமுக வெற்றி பெற்றது.
ஆனால் மூன்றே மாதத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். இது மிகப்பெரிய வருத்தம் தான்.
இதற்கு முன் பொதுச்செயலாளர் உத்தரவின்படி தாராபுரத்தில் நான்தான் தேர்தல் வேலைகளை பார்த்தேன். கிட்டத்தட்ட 80 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றோம். ஆனால் இன்று பாதி ஓட்டு தான் வந்திருக்கிறது. இரட்டை இலைக்கு விழுகிற ஓட்டு குறைந்து இருக்கிறது.
இந்த முறையும் எங்களை பொறுப்பாளர்களாக போட்டிருந்தார்கள். தொகுதிக்கு நான்கு பூத் கொடுத்திருந்தார்கள். அங்கும் பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்டோரை அனுப்பி வேலை செய்தோம்..
இதிலும் இரண்டு பூத்தில் அதிக ஓட்டுகளை தான் வாங்கிக் கொடுத்திருக்கிறோம்.
கட்சிக்காக எப்போது எந்த வேலை கொடுத்தாலும் நாங்கள் செய்வோம்.
ஆனால் இப்போது எங்கள் பொதுச் செயலாளர் பற்றி எதையாவது பேசி அதை செய்தியாக்க நாங்கள் உடன்படவில்லை.
அதேபோன்று இது எங்களை வளர்த்த இயக்கம். இதை விட்டுவிட்டு அங்கே போகிறோம் அங்கே போகிறோம் என்பதெல்லாம் இல்லை.
அதிமுகவை விட்டுவிட்டு நாங்கள் எதற்கு போக வேண்டும். இவர்கள் அங்கே போகிறார்கள் இங்கே போகிறார்கள் என்றெல்லாம் செய்தி போடுகிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
இது பற்றிய கேள்விக்கே இடமில்லை” என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் செல்வாக்கு குறைந்திருக்கிறதா?
“தாராபுரத்தில் மூன்றாவது இடத்திற்கு அதிமுக சென்றுவிட்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதிமுக செல்வாக்கு குறையவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நிறைய தேர்தல்கள் வந்தன.
2021 தேர்தலில் கூட உறுதியாக அதிமுக ஆட்சி வந்திருக்கும்.
2019 தேர்தலில் தேமுதிக, சரத்குமார் கட்சி, கிருஷ்ணசாமி கட்சி எல்லாம் எங்களுடன் இருந்தது.
இந்த கட்சிகளை 2021 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் சேர்க்க முடியாதது ஒரு வருத்தம். அதேபோல அப்போது டிடிவி தினகரன் 20 சீட் கேட்டார்.
இவர்களெல்லாம் அப்போதே உள்ளே வந்திருந்தால் 2021லும் அதிமுக வந்திருக்கும்.
அதை மிஸ் செய்து விட்டோம். அதேபோல 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடர்ந்திருந்தால் 4 மத்திய அமைச்சர்களை உருவாக்கி இருக்கலாம்.
இப்படி பல கூட்டணிகளை இழந்து விட்டோம்.
இன்றைக்கு எங்களிடம் இதையெல்லாம் கேட்பதைவிட, பொதுச் செயலாளரிடம் தான் கேட்க வேண்டும்.
இனி பொதுச் செயலாளரை பற்றி எல்லாம் விமர்சனம் செய்ய நாங்கள் தயாராக இல்லை.
இன்றைக்கு இருக்கும் சூழலில், வெளியே போனவர்களை எல்லாம் மீண்டும் பொதுச் செயலாளர் அரவணைப்பார் என்று நம்புகிறோம்.
வெளியே போனவர்கள், பிரிந்து போனவர்கள் எல்லாம் மீண்டும் ஒன்று சேர்ந்து அதிமுக பலப்பட வேண்டும்.
பொதுச் செயலாளர் இதை செய்வார் என்று நம்புகிறோம்”
இன்னும் 15 எம்எல்ஏக்கள் எங்களுடன் வருவார்கள் என்று செங்கோட்டையன் சொல்லி இருக்கிறாரே?
இதைப் பற்றி அண்ணன் செங்கோட்டையனிடம் தான் கேட்க வேண்டும். வலுக்கட்டாயமாக செங்கோட்டையனுக்கு ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
சசிகலாவும் வரவேண்டும் என்று நினைக்கிறீர்களா?
சசிகலா மட்டுமல்ல டிடிவி தினகரன் என எல்லோருமே ஒன்று சேர வேண்டும். திமுகவுக்கு போன ஓபிஎஸ் அண்ணன் கூட வரவேண்டும். இவர்கள் எல்லோரும் வந்து மீண்டும் அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். இதையெல்லாம் பொதுச் செயலாளர் செய்வார் என்று நம்புகிறோம்.
