இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் போராட்டங்களை நடத்தி வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜித் திப்கே, அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தேசியத் தலைவர் நேஹா போரா ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதற்கு திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வரும் காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவன தலைவர் அபிஜித் திப்கே. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை அமைப்பின் மாணவர் பிரிவான அகில இந்திய மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவர் நேஹா போரா. 29 வயதான இவர், டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் மற்றும் இளைஞர் போராட்டங்களின் முக்கிய முகமாக இருந்து வருகிறார்.
டெல்லி கன்னாட் பிளேஸில் இன்று (அக்டோபர் 16) தேசியக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த அபிஜித் திப்கே அழைப்பு விடுத்திருந்தார். இதற்காக ஜண்டேவாலனில் உள்ள வீட்டிலிருந்து புறப்பட்ட அவரை போலீசார் தடுத்து வைத்தனர். அதேபோல, மண்டி ஹவுஸ் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நேஹா போராவையும் போலீசார் தடுத்து வைத்தனர்.
இருவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுத்து வைத்திருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.
டெல்லி போலீசாரின் இந்நடவடிக்கைக்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “அபிஜித் திப்கே எங்கே? நேஹா எங்கே? அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்காமல் தடுத்து வைத்திருப்பது அப்பட்டமான சட்டவிரோதச் செயல் மட்டுமல்ல, மனிதாபிமானமற்ற செயல்.
மத்திய அரசு அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும்.
இந்தப் போராட்டத்தை நசுக்க மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும் அதை மேலும் வலுப்படுத்தவே செய்யும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும். மத்திய பாஜக அரசுக்கு வேறு வழியே இல்லை” என்றும் தமது எக்ஸ் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
