அனிருத் – காவியா திருமணத்தை முன்னிட்டு அவர்களது குடும்பத்தினர் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு அழைப்பிதழ் வைத்து வருகின்றனர்.
சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் தலைமைச் செயல் அதிகாரியுமான காவ்யா மாறன், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமணம் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் வரும் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து வரும் நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்தநிலையில் அனிருத் – காவியா குடும்பத்தினர் முக்கிய விஐபிகளுக்கு நேரில் பத்திரிகை வைத்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி, அனிருத் ரவிச்சந்தரின் பெற்றோர் லட்சுமி, ரவிச்சந்தர் ஆகியோர் அழைப்பிதழ் வழங்கி திருமண விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தனர்.

அதுபோன்று தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர், முதல்வர் விஜய், கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி,

ஆந்திரப் பிரதேச மனிதவள மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமாராவ் என பல்வேறு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு நேரில் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் குடும்ப தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது பேத்தி காவியாவின் திருமணத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதில், ”பேரன்புடையீர்… வணக்கம்…. வரும் 2026 நவம்பர் திங்கள் 21 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, எனது அன்புப் பெயர்த்தியும் முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்ளுப் பெயர்த்தியும் மல்லிகா & முரசொலி மாறன் பெயர்த்தியும் காவேரி & கலாநிதி மாறனின் அன்பு மகளுமான காவியா கலாநிதி மாறனுக்கும் லட்சுமி & ரவிச்சந்தரின் அன்பு மகனுமான அனிருத் ரவிச்சந்தருக்கும் சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற இருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள மிக்க அன்புடன் வேண்டுகிறேன்” என அழைத்துள்ளார்.
