தேவா மறைவு : முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

Published On:

| By Pandeeswari Gurusamy

பிரபல இசையமைப்பாளர் தேவா திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரிடையே பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவிற்கு தமிழக முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பு

இதுகுறித்து தமிழக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பதிவில், “தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.

ADVERTISEMENT

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.

இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

வெள்ளை மனம் கொண்டவர் தேவா

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.

பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களைத் திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர்.

ADVERTISEMENT

எளிமையான கிராமத்துப் பின்னணியில் இருந்து சென்னைக்கு வந்து, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து எத்தனையோ பேருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர். உச்ச நட்சத்திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.

குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தேவா அவர்கள் இணைந்து பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் பெருவெற்றியை ஈட்டின. இன்றளவும், தேவா அவர்களின் இசையோடுதான் ரஜினிகாந்த் அவர்களின் பெயர் திரையில் தோன்றுகிறது என்பதில் இருந்தே அதன் வீச்சை உணர்ந்துகொள்ளலாம். நான் ஆட்டோக்காரன் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே தமிழ்நாட்டில் இருக்காது. கலைஞானி கமலஹாசன் அவர்களது அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற நகைச்சுவைப் படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

ரஜினி, கமல் மட்டுமல்லாமல், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தேவா அளித்திருக்கிறார். குறிப்பாக, வாராரு அழகர் வாராரு என்ற தேவாவின் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை மதுரைக்காரர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.

நாயகர்களுக்கான mass பாடல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான். ஆசை, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, ஆஹா என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெல்லிசையை தேவா தந்துள்ளார். தலைவர் கலைஞர் அவர்கள்தான், தேவா அவர்களின் இசையின் இனிமையை மெச்சி ‘தேனிசைத் தென்றல்’ என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.

எண்பதுகளில் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் இன்றைய இளைஞர்களான அனிருத் உள்ளிட்டோரின் இசையிலும் எந்தத் தலைக்கனமும் இல்லாமல் நட்புணர்வோடு பாடியுள்ளார். அண்மைக்காலமாக, அவரது இசைக் கச்சேரிகளும் எல்லா ஊர்களிலும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

தமிழ் வெகுசன இசை வரலாற்றை தேவா அவர்களை விடுத்துவிட்டு எவராலும் எழுத முடியாது. பல அத்தியாயங்களை அவருக்கென ஒதுக்கியாக வேண்டும்.

ஒருபுறம் இசைஞானி இளையராஜா அவர்களும், மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களும் கோலோச்சிய காலத்திலும் தேவா தனக்கெனத் தனிப்பாதை அமைத்து வெற்றி கண்டார். இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர்தான் தேவா.

தேவா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது. தேவா அவர்களை இழந்து வாடும் அவரது மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சகோதரர் முரளி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், தேவா அவர்களின் இரசிக நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பிரச்சார பாடல்களை உருவாக்கியவர்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில்,”பிரபல இசையமைப்பாளர் அன்புச் சகோதரர் “தேனிசைத் தென்றல்” தேவா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

எளிய பின்னணியில் இருந்து வந்து, எளிய மக்களின் வாழ்வியலை தன் இசையால் பிரதிபலித்தவர் தேவா அவர்கள். Mass, Melody, Devotion என அனைத்து வகையான பாடல்களிலும் தனி முத்திரை பதித்தவர்.

தேவா அவர்களின் “கானா” பாடல்களுக்கு துள்ளாத கால்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரின் உள்ளங்களிலும் நிறைந்திருக்கிறது அவருடைய இசை.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது பெரும் மதிப்பும், நம் அதிமுக மீது பேரன்பும் கொண்ட சகோதரர் தேவா அவர்கள், நம் கழகத்திற்காக மெட்டமைத்த பிரச்சாரப் பாடல்கள் என்றைக்கும் கழகத் தொண்டர்களின் இதயங்களில் தனித்த இடம் பெற்றவை.

அம்மா அவர்களுக்கும் சரி, நான் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னும் சரி, தேவா அவர்கள் நமக்காக பாடிய பிரச்சாரப் பாடல்களே கழகத்தின் குரலாக பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், நம் இயக்கத்தின் அறைகூவல் குரலாக அன்புச் சகோதரர் தேவா அவர்களின் காந்தக் குரல் திகழும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

“தேனிசைத் தென்றல்” தேவா அவர்கள் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறை மற்றும் இசைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

இசை உலகில் அழியாத தடம் பதித்தவர்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், “தமிழ்த் திரையுலகின் இசை ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த ‘தேனிசைத் தென்றல்’ இசையமைப்பாளர் தேவா அவர்களின் மறைவு மிகுந்த வேதனையையும் பேரதிர்ச்சியையும் அளிக்கிறது. அவரது மறைவால் இசையுலகம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பைச் சந்தித்துள்ளது.

தனது தனித்துவமான இசையாலும், இனிமையான மெட்டுகளாலும், மக்கள் மனங்களில் என்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற பாடல்களாலும் தமிழ் இசை உலகில் அழியாத தடம் பதித்தவர் தேவா அவர்கள். அவரது இசை, தலைமுறைகள் பல கடந்தும் நம் நினைவுகளிலும் இதயங்களிலும் உயிர்ப்புடன் வாழும்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

சாமானிய மனிதர்களின் உணர்வுகளை இசையாக்கியவர்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பதிவில், “‘தேனிசைத் தென்றல்’ என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட புகழ்பெற்ற இசையமைப்பாளர் அண்ணன் தேவா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

​தொண்ணூறுகளின் தலைமுறையைத் தனது துள்ளலான கானா பாடல்களாலும், நெஞ்சை உருக்கும் மெல்லிசையாலும் கட்டிப்போட்ட மாபெரும் இசைக் கலைஞர். சாமானிய மனிதர்களின் உணர்வுகளைத் திரையிசையாக மாற்றிய பெருமை அவருக்கு உண்டு.

அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கும் இசையுலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share