தமிழகத்திற்குள் போதைப்பொருள் வர திமுக தான் காரணம் – அமைச்சர் நிர்மல் குமார்

Published On:

| By Pandeeswari Gurusamy

Minister Nirmal Kumar Press Meet

தமிழகத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் அதிகளவில் ஊடுருவியதற்கு முந்தைய திமுக அரசுதான் முக்கியக் காரணம். ஜாபர் சாதிக் என்பவர் வந்த பிறகே தமிழ்நாட்டில் மெத்தம்பெட்டமைன் புழக்கம் அதிகரித்தது என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் பூபாலன் என்பவரது வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) நடத்திய அதிரடிச் சோதனையில், இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்திதார். மெத்தபெட்டமைன் பறிமுதல் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தமிழகத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் அதிகளவில் ஊடுருவியதற்கு முந்தைய திமுக அரசுதான் முக்கியக் காரணம். ஜாபர் சாதிக் என்பவர் வந்த பிறகே தமிழ்நாட்டில் மெத்தம்பெட்டமைன் புழக்கம் அதிகரித்தது. போதைப்பொருள் விவகாரத்தில் ஈடுபடுபவர்கள் எந்தக் கட்சியினராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே திமுக ஆட்சியாக இருந்திருந்தால், மெத்தம்பெட்டமைனைக் ‘கோலப்பொடி’ என்று கூறி வழக்கை முடித்திருப்பார்கள். முன்பு ராமநாதபுரத்தில் போதைப்பொருள் சிக்கியபோது, அதை ‘உரம்’ என்றவர்கள் தான் திமுகவினர்.”என விமர்சித்தார்.

அதிமுக குறித்த கேள்விக்கு, “எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். அதிமுகவின் சொத்துகளை திமுகவிடம் அடகு வைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். முதலமைச்சராக விஜயைச் சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை. திமுகவுடன் கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்கும் அவரது முடிவை அதிமுக தலைமைக் கழகத்தில் உள்ள ஒரு செங்கல் கூட ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தில் தொடர்ந்து இடைத்தேர்தல்கள் வருவதற்குக் காரணமே எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைதான் காரணம்” என்றார்.

ADVERTISEMENT

கோவை பெரியார் அறிவுலகம் குறித்த கேள்விக்கு, “கோவையில் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த பெரியார் அறிவுலகம் பொதுமக்களின் வரிப்பணத்தில் (அரசுப் பணத்தில்) கட்டப்பட்டதாகும். இது திமுகவினரின் சொந்தத் திட்டம் கிடையாது. ஸ்டாலின் இன்னமும் ‘முதலமைச்சர்’ என்ற கனவு உலகத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். பெரியார் அறிவுலகத்தை அவரா கட்டினார்? இதில் அவருடைய யோசனை எதுவுமே இல்லை; அரசுத் திட்டங்களே இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் உருப்படியான எந்தத் திட்டத்தையும் திமுக செயல்படுத்தவில்லை. அப்படிச் செய்திருந்தால், அவர் ஏன் தனது சொந்தத் தொகுதியிலேயே தோற்றுப்போனார்?”என்று கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share