இந்த குசும்பு கேள்வி வேண்டாம்… அந்த 65 டீம் எங்கே?: தவெக அரசை விளாசிய ஆ.ராசா

Published On:

| By Kavi

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா கூறியுள்ளார். 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்டோபர் 17) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. 

ADVERTISEMENT

இதில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

ADVERTISEMENT

மாணவர் இயக்கங்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு.

இரட்டை வேடம் போடும் காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றி கழகத்துக்கு கண்டனம்.

ADVERTISEMENT

தேர்தல் குளறுபடிகளை தீர்க்கக் கோரி குடியரசு தலைவருக்கு மனு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா, “எங்களை கேள்வி கேட்க தார்மீக உரிமை காங்கிரசுக்கு இருக்கிறதா என்று தீர்மானத்தின் மூலம் கேள்வி எழுப்பி இருக்கிறோம். எஸ் ஐ ஆர் கொண்டு வரப்பட்ட காலத்தில் இருந்தே தொடர்ந்து ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுத்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்” என்று கூறினார். 

கேள்வி பதில்

எஸ்.ஐ.ஆர் பிராசஸை தமிழகத்தில் திமுக அரசு தானே நடத்தியது என்று ஆதவ் அர்ஜுனா சொல்லி இருக்கிறாரே? 

அவர் பக்கத்தில் தானே திருமாவளவன் இருக்கிறார். ஏன் எங்களிடம் வந்து கேட்கிறீர்கள். நாங்கள் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரில் இருக்கிறோம். அருகில் இருப்பது திருமாவளவன் தான். மிகவும் இணக்கமாக இருக்கிறார்கள்.

கொளத்தூரில் தோற்றுப்போனதற்கு எஸ்ஐஆர் தான் காரணம். திமுக வராமல் போனதற்கும் எஸ்ஐஆர் தான் காரணம் என்று திருமாவளவன் சொல்லியிருக்கிறார். 

இதைப் பற்றி முதலில் நிர்மல்குமாரும் திருமாவளவனும் உட்கார்ந்து முடிவு செய்த பிறகு எங்களிடம் பேசுங்கள். 

கொளத்தூரில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நிற்க வேண்டாம் என்று  சொன்னதாக திருமாவளவன் கூறியிருக்கிறாரே?

இதை தலைவரிடம் தான் கேட்க வேண்டும். அவர் சொன்னது போல் எனக்கு தெரியவில்லை. எங்கள் தலைவர் வெளிப்படையானவர். அப்படி ஏதேனும் சொல்லி இருந்தால் சொல்லியிருப்பார். 

தலைவரிடம் தான் கேட்க வேண்டும். 

அப்படியானால் திருமாவளவன் அப்போது ஒரு மாதிரி இப்போது ஒரு மாதிரி சொல்கிறாரா. முன்னுக்குப் பின் பேசுகிறாரா? 

நான் அப்படி சொல்லவில்லை. எனக்கு தெரியாது என்று தான் சொன்னேன். இந்த குசும்பு கேள்வி எல்லாம் இங்கே வைத்துக் கொள்ளக் கூடாது. 

டெல்லியில் நடப்பது போல தமிழகத்திலும் போராட்டம் நடக்க வேண்டும் என்று திருமாவளவன் உள்ளிட்டோர் சொல்லி இருக்கிறார்கள். திமுகவின் நிலைப்பாடு என்ன? 

நடக்கும் போராட்டங்களை ஆதரித்திருக்கிறோம். கனிமொழி போய் பேசி இருக்கிறார். நான், தமிழச்சி தங்கபாண்டியன் எல்லாம் சென்று மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்று தரையில் எல்லாம் அமர்ந்திருக்கிறோம். இதற்கெல்லாம் என்ன அர்த்தம்.

எஸ் ஐ ஆர் நடக்காமல் இருந்திருந்தால் தமிழக வெற்றி கழகம் 160 இடங்களில் வென்று இருக்கும் என்று ஆதவ் அர்ஜுனா கூறுகிறாரே? 

அவர் எந்த கணக்கில் பேசுகிறார் என்று தெரியவில்லை. அவர் பேசுவதெல்லாம் தனிக்கணக்காக தான் இருக்கிறது. ஆதவ் அர்ஜுனா பேசுவதை எங்களிடம் கேட்பதில் பிரயோஜனம் இல்லை. ஏனென்றால் அருகிலேயே திருமாவளவன் இருக்கிறார். 

காக்ரோச் ஜனதா கட்சியினர் தேர்தல் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? 

மூத்த அரசியல்வாதி சிதம்பரமே சொல்லி இருக்கிறார். சில மாநிலங்களை அவர்கள் கைப்பற்றுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார். அவ்வளவு பெரிய சீனியர் சொல்லும்போது இதை அவ்வளவு எளிதாக தூக்கி போட முடியாது.

தமிழக வெற்றி கழக நிர்வாகி ஒருவரது வீட்டில் 135 கிலோ போதை பொருட்கள் எடுக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு…

முதலமைச்சர் பதவியேற்ற மேடையிலேயே ஒரு கையெழுத்து போட்டார். திமுக ஆட்சியில் போதை பொருளை கட்டுப்படுத்தவில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்தவில்லை என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூச்சலிட்டார்கள். அந்த குற்றச்சாட்டுகளை நம்பி மக்கள் வாக்களித்திருக்கலாம். அதனால் அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கலாம் பரவாயில்லை. 

இப்போது நான்கு மாதங்கள் கடந்துவிட்டது. போதைப் பொருள் ஒழிப்புக்காக 65 குழுக்களை போட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே இதற்கு டீம் இல்லாமல் ஒற்றை மனிதராய் இருந்தவர் இப்போது இருக்கிற டிஜிபி. எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் சொன்னது போல, அவர் (டிஜிபி) தலைமையில் நடைபெற்ற பணிகளை எல்லாம் கேவலப்படுத்தி கொச்சைப்படுத்தினார்கள். இப்போது அவரையே டிஜிபியாக போட்டிருக்கிறார்கள். இதுவே புரியாத புதிர். 

இப்போது இந்த 65 குழுக்களும் கடந்த நான்கு மாதங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி டெல்லியில் இருந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் வந்து இவ்வளவு பெரிய அளவிலான போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். 

பறிமுதல் செய்யப்பட்ட இந்த 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளின் மதிப்பு 800 கோடி ரூபாய் முதல் 1000 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று சொல்கிறார்கள். ஏதோ சிறு சிறு பயன்பாட்டுக்காக குஜராத்தில் இருந்து வருகிறது என்றெல்லாம் சொல்லுவார்கள். 

ஆனால் இப்போது தமிழ்நாடு போதை பொருள் மையமாகவே மாறிவிட்டது. இங்கிருந்து ஸ்ரீலங்காவிற்கு செல்கிறதாம்.

இங்கு 65 குழுக்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, இவ்வளவு பெரிய அளவிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்றால் இன்னும் எவ்வளவு போதை பொருள் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. 

இதையெல்லாம் கேட்டால் அப்போது நடந்ததே என்று திமுகவை ஒப்பிட்டு பேசுவார்கள். 

யாராவது ஒருவர் தவறு செய்து விட்டால், அவர் ராஜாவோடு, உதயநிதியோடு, பரந்தாமனோடு புகைப்படம் எடுத்திருந்தால் அவர்களை திமுகவினர் என்று சொல்வீர்கள். 

ஆனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ பொறுப்பில் இருந்தவர். கீழையூர் ஒன்றிய செயற்குழு உறுப்பினராக இருந்தவர் என்று சொல்கிறார்கள். 

இதற்கு முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அருணன் என்பவரிடம் 140 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேதாரணியம் வடக்கு ஒன்றிய செயலாளர் அருண் பாண்டியன் தொடர்பாக, 120 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பூபதி ராஜா என்ற நிர்வாகி தொடர்பாக ஜூன் 26 ஆம் தேதி வாகன சோதனையில் 12 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. 

அரசியல் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதை வைத்து எவ்வளவு பிரச்சாரம் செய்தீர்கள். இப்போது உங்கள் கட்சியின் நிர்வாகி, தேர்தல் பொறுப்பாளர், ஒன்றிய செயலாளர் உள்ளிட்டோர் தொடர்பாக இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 

இதற்கு முன் தமிழகத்தில் இவ்வளவு பெரிய அளவில் இந்த போதை பொருள் சிக்கியது இல்லை. இதில் சர்வதேச நெட்வொர்க் இருக்குமோ என சந்தேகிக்கிறேன்” என்று கூறினார்.

A Raja Speech | குழப்பத்தில் திருமா, நிர்மல்குமார் | SIR | ECI | Thirumavalavan | Aadhav Arjuna
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share