வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக திருமாவளவனின் குற்றச்சாட்டுக்கு கராத்தே தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக நாடு முழுவதும் இந்தியா கூட்டணி கட்சியினர் ஜனநாயகம் காப்போம் என்று தலைப்பில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எஸ்ஐஆர் மூலம் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, கேரளாவில் பினராயி விஜயன் உள்ளிட்டோர் டார்கெட் செய்யப்பட்டனர்.
குறிப்பாக கொளத்தூரில் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான்.
தேர்தலுக்கு முன்னதாகவே, முன்னாள் முதல்வர் ஸ்டாலினிடம் எச்சரித்தேன். தொகுதி மாறி நிற்குமாறு கேட்டுக் கொண்டேன்” என்று கூறியிருந்தார்.
திருமாவளவன் கூறியது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சென்னை முன்னாள் மேயரும் பாஜக மாநில செயலாளருமான கராத்தே தியாகராஜன் இன்று (அக்டோபர் 17) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியலில் முறைகேடு நடந்ததாக இந்தியா கூட்டணி சார்பில் கடந்த 15.10.2026 அன்று சென்னையில் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டுப் பேசிய வி.சி.க. தலைவர் திருமாவளவன், எஸ்.ஐ.ஆர். மூலம் மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டனர். மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்த சதி குறித்து தேர்தலுக்கு முன்பே ஸ்டாலினிடம் தெரிவித்தேன் என்று சொல்லியிருக்கிறார்.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு முன்பு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 41 லட்சம் பேர். எஸ்.ஐ.ஆர். பணிகள் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சம் ! அதாவது, 74 லட்சம் வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் நீக்கப்பட்டிருந்தனர்.
சென்னையைப் பொறுத்தவரை, 16 சட்டமன்றத் தொகுதிகளில் எஸ்.ஐ.ஆருக்கு முன்பு 40 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணி களுக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அன்றைக்கு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியாக இருந்த சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ். இதனை வெளியிட்டார். அதன்படி, சென்னையிலுள்ள 16 தொகு திகளிலும் 28 லட்சத்து 30 ஆயிரத்து 936 வாக்களர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு முன்பும், பின்பும் ஒப்பிடும் போது இறுதி வாக்காளர் பட்டியலில் 11 லட்சத்து 69 ஆயிரத்து 64 பேர் நீக்கப்பட்டிருந்தனர்.
இதில், முன்னாள் முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில், எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு முன்பு 2 லட்சத்து 90,000 பேர் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்குப் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட போது 2 லட்சத்து 7 ஆயிரம் பேர் இருந்தனர். அதாவது, அண்ணன் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 83,000 பேர் நீக்கப்பட்டிருந்தனர்.
தமிழகத்தில் மாநகராட்சி ஆணையர்களும், கலெக்டர்களும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக செயலாற்றினர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி களின் பிரதிநிதிகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து 10 மீட்டிங் நடத்தினர்.
சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் ஐ.ஏ.எஸ். நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில், திமுக மாநில வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த வழக்கறிஞர் சந்துரு, காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் நவாஸ், அதிமுக மா.செ.பாலகங்கா, பாஜக சார்பில் கராத்தே தியாகராஜனாகிய நான், திருமாவளவனின் வி.சி.க. நிர்வாகி இளங்கோவன், சி.பி.எம். சார்பில் வடசென்னையை சேர்ந்த மா.செ. செல்வா, மற்றும் சி.பி.ஐ., நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.
அதேபோல, தமிழகத்தின் தேர்தல் ஆணைய CEO அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டங்களில் திமுக சார்பில் வழக்கறிஞர்கள் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, வி.சி.க. சார்பில் ரவிக்குமார் உள்பட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து 23.02.2026 அன்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தொகுதிகள் வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. , சில நாட்கள் இடைவெளியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சென்னைக்கு வந்திருந்தார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஹோட்டல் லீலா பேலஸில் மீட்டிங் நடத்தினார். அதில் திமுக சார்பில் வழக்கறிஞர்கள் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, வி.சி.க. சார்பில் ரவிக்குமார் எம்.பி., சி.பி.எம். சார்பில் மாநில செயலாளர் சண்முகம், சி.பி.ஐ. சார்பில் மாநில செயலாளர் வீரபாண்டியன், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் உள்பட அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இப்படி, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன், தமிழக தேர்தல் ஆணையர் CEO அர்ச்சனா பட்நாயக், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோர் எஸ்.ஐ.ஆர். பணிகள் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் நடக்கும் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்காக ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி பிரதாப் சிங், ஸ்பெசல் அப்சர்வராக நியமிக்கப் பட்டிருந்தார். அவர், கடந்த 20.4.2026 அன்று சென்னை வருமான வரித் துறை அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதற்கு பிறகு அது குறித்து ஒரு மீட்டிங் நடத்தினார்.
இந்த 4 மீட்டிங்கிலும் கலந்துகொண்ட யாரும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி களின் முக்கிய நிர்வாகிகள் ஓரலாகவோ அல்லது ரிட்டனாகவோ எந்த புகார்களும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக, எஸ்.ஐ.ஆர். திருத்தப்பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாக யாரும் புகார் சொல்லவில்லை. அதுமட்டுமல்ல, தகுதியுள்ள வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தால் வாக்குப் பதிவுகள் நடந்த போது பொதுமக்களிடமிருந்து பெரிய பிரச்சனை வெடித்திருக்கும்.
அப்படி பொதுமக்களிடமிருந்து தேர்தல் சமயத்தில் எந்த புகார்களும் வரவில்லை. இன்னும் சொல்லப்போனால், தேர்தல் அதிகாரிகளாக கலெக்டர்கள், கமிஷ்னர்கள், ஈ.ஆர்.ஒ.க்கள், பி.எல்.ஓ.க்கள் என எல்லோருமே திமுக ஆட்சியில் அவர்களுக்கு வேண்டிய அதிகாரிகள் தான். அதாவது, திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் சிபாரிசுபடி தான் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தவெகவில் உள்ள நெருங்கிய நண்பர் ஒருவரை சந்தித்த போது, எஸ்.ஐ.ஆர். பணிகளில் வாக்காளர்கள் நீக்கம் பற்றியும், அது தொடர்பான பல விபரங்களையும் எடுத்துச் சொன்னேன். உடனே அவர், தவெகவின் மிக முக்கியமான பரபரப்பு பிரமுகரை (தவெக ஆட்சியில் முக்கிய அமைச்சராக தற்போது இருக்கிறார் ) ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு, ஃபோனை என்னிடம் கொடுத்து பேசச்சொன்னார்.
நானும் அந்த பரபரப்பு பிரமுகரிடம், இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் நீக்கம் வரப்போகிறது என்பதையும், அதில் தவெக ஒட்டர்ஸ் நீக்கப்பட்டிருந்தால் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுங்கள் எனவும் அவரிடம் தெரிவித்தேன். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானப்பிறகு வாக்காளர்கள் நீக்கத்தில் தவறு நடந்திருப்பதாக எந்த புகாரையும் தவெகவும் சொல்லவில்லை. ஆக, எஸ்.ஐ.ஆர். குறித்த விபரங்கள், தவெகவின் முக்கிய பரபரப்பு பிரமுகர் மட்டுமல்லாமல் தவெகவின் நிர்வாகிகள் பலருக்கும் நன்றாகவேத் தெரியும்.
இப்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் என மூன்று தரப்பிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஸ்பெசல் அப்சர்வர் தலைமையிலும் நடத்தப்பட்டது.
அதில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், ஒரு முறை கூட பேச்சளவிலோ, எழுத்துப்பூர்வமாகவோ எஸ்.ஐ.ஆர். பணிகளில் தகுதியுள்ள வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக எந்த கட்சியும் புகார் தெரிவிக்கவில்லை. உண்மை நிலவரம் இப்படி இருக்கையில், இன்றைக்கு தேவையில்லாமல் பாஜகவையும் தேர்தல் ஆணையத்தையும் திருமாவளவன் குற்றம்சாட்டுவது தவறானது. தவறு நடந்திருப்பது உண்மையாக இருந்திருந்தால், எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்பாக நடந்த கூட்டங்களில் திருமாவளவனின் வி.சி.க.வினர் புகார் தெரிவித்திருக்கலாமே! ஏன் தெரிவிக்கவில்லை? என்பதுதான் கேள்வி.
அன்றைக்கு தேர்தல் அதிகாரிகள் நடந்திய சென்னை ஆலோசனைக் கூட்டங்களில் காங்கிரஸ் சார்பில் கலந்து கொண்ட வழக்கறிஞர் நவாசிடமும், அர்ச்சசனா பட்நாயக் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞனேஷ் குமார் ஆகியோர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தங்கபாலுவிடமும் இப்போது புதிதாக தலைவர் பொறுப்புக்கு வந்துள்ள மாணிக்கம் தாக்கூர் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
எஸ்.ஐ.ஆரில் சதி நடப்பதாகவும் திமுக தலைவர் அண்ணன் மு.க .ஸ்டாலின்கிட்ட முன் கூட்டியே சொன்னதாகவும் இன்றைக்கு சொல்லுகிற திருமாவளவன், இதனை அப்போதே தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை. கொடுக்காமல் தடுத்தது எது என்பதை அவர் தான் விளக்க வேண்டும். இன்றைக்கு அரசியல் சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. தவெக கூட்டணிக்குள் பாமக வந்துவிட்டால் விசிகவை முதல்வர் விஜய் புறக்கணித்துவிட்டால் அப்போது நமக்கு போக்கிடம் இருக்காது என யோசித்து, திமுகவின் ஆதரவை பெறுவதற்காகத்தான் இப்படி தவறான தகவலை அண்ணன் மு.க.ஸ்டாலினை நெருங்க, தெரிவிக்கிறார் என தோன்றுகிறது. அதனால், எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் தவறான தகவல்களை பதிவு செய்வதை திருமாவளவன் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, விசிக, சி.பி.ஐ., சி. பி. எம். கட்சிகளின் தலைவர்கள் பாஜகவையும் தேர்தல் ஆணையத்தையும் குற்றம்சாட்டுவது ஏற்புடையாது அல்ல! எஸ். ஐ. ஆர்.பணிகள் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டங்களில் மேற்கண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது, எஸ். ஐ. ஆரில் தவறு நடந்திருப்பதாக இவர்கள் யாரும் ரிட்டனாக புகார் கொடுக்கவில்லை என்பதை நினைவு படுத்துகிறேன்”என்று கூறியுள்ளார்.
