அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள், நீக்கி வைக்கப்பட்டவர்கள், ஒதுங்கி இருப்பவர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுகவின் 55-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கணபதிபட்டு கிராமத்தில் இன்று அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மயிலம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் காக்கப்பட்ட இந்த மாபெரும் இயக்கமான அதிமுக, 55-ஆம் ஆண்டைத் தொட்டுள்ளது. இந்தியாவில் 31 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் இருந்த ஒரே கட்சி அதிமுகதான். 55-ஆம் ஆண்டு தொடக்க விழாவில், அனைத்துத் தொண்டர்களின் மற்றும் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால், அதிமுக வலிமை பெற வேண்டும், புத்துயிர் பெற வேண்டும், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதுதான்.
மறப்போம், மன்னிப்போம்
அதிமுக இயக்கத்தை மீண்டும் வலிமை பெறச் செய்ய, பிரிந்து சென்றவர்கள், நீக்கி வைக்கப்பட்டவர்கள், ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் என அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற எண்ணத்துடன் கடந்த காலங்களைப் பற்றி நினைக்காமல், தவறுகள் இரு பக்கமும் இருக்கலாம் என்பதை உணர்ந்து, ஒற்றுமையாக இருந்து இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும். எனக்குப் பதவி கொடுத்து அழகு பார்த்த இயக்கம் இது. ஜெயலலிதா சொன்னது போல நூறாண்டு காலம் நிலைத்து நிற்க வேண்டும்; அதற்குச் சிறு துரும்பைக் கூட விடக்கூடாது.
அனைவரையும் இணைத்துச் செயல்பட வேண்டும். தொண்டர்கள் மத்தியில் ‘வெற்றி பெறுவோம்’ என்ற நம்பிக்கையை உருவாக்கினால், மக்களும் நம் மீது நம்பிக்கை கொள்வார்கள். யார் மீதும் குற்றம் சொல்ல விரும்பவில்லை; தேர்தல் தோல்வி குறித்தும் எதையும் பேச விரும்பவில்லை. ‘நடந்தது நடந்து முடிந்ததாக இருக்கட்டும், இந்த இயக்கம் வலிமை பெற ஒத்துழைப்பைத் தருகிறேன்’ என்றுதான் நான் சொன்னேன். எனக்குப் பதவி தாருங்கள் என்று எதையும் நான் கேட்கவில்லை.
பதவி எதுவும் தேவையில்லை
ஆனால், நான் பேசி 24 மணி நேரத்திற்குள் எனது பகுதியில் உள்ள கிட்டத்தட்ட 120-க்கும் மேற்பட்ட கிளைக் கழகச் செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கிளைச் செயலாளர்கள் என்ன செய்வார்கள்? யார் இருந்தாலும் அவர்கள்தாம் உழைக்கப் போகிறார்கள். நிர்வாகிகள் நீக்கம் போதாது என்று, இப்போது தொண்டர்களையும் நீக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.
எனக்கு அனைத்துப் பதவிகளையும் ஜெயலலிதா கொடுத்துவிட்டார். 25 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என அனைத்துப் பதவிகளையும் பார்த்துவிட்டேன். எனக்குப் பதவி எதுவும் தேவையில்லை; அதிமுக ஒற்றுமையாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்.
சர்ச்சையை வளர்க்க விரும்பவில்லை
‘நீங்கள் ஏன் இடம் கொடுக்கிறீர்கள்? நீங்கள் இடம் கொடுத்தால் அல்லவா அவர்கள் வருவார்கள்? தவறு நம்மிடம்தான் இருக்கிறது. நம்மை நாமே சுய பரிசோதனை செய்துகொண்டு ஒற்றுமையாக இருந்தால், யாரும் உள்ளே வர இயலாது. தவறுகள் நம்மிடம் இருக்கும் போது, குற்றங்களை அடுத்தவர்கள் மீது சொல்வதில் நியாயம் இல்லை.
எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இருக்கிறது. பல விஷயங்களைப் பேசலாம்; ஆனால், நான் சர்ச்சையை வளர்க்க விரும்பவில்லை. இந்த இயக்கத்தை ஒரு நல்ல முடிவுக்குக் கொண்டு வந்து வலிமைப்படுத்த வேண்டும் என்பதே எனது எண்ணம்”
இவ்வாறு சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
