அதிமுகவில் தனுஷ்?

Published On:

| By Kavi

நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இரு கரம் கூப்பி வரவேற்போம் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சர் ஆகியுள்ளார். 

ADVERTISEMENT

இந்த நிலையில் நடிகர் தனுஷும் அரசியலில் கால் பதிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியுள்ளார். 

ADVERTISEMENT

இந்த நிலையில் அவர் அதிமுகவில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது. 

இது தொடர்பாக சிவகாசியில் இன்று (அக்டோபர் 17) செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

ADVERTISEMENT

இதற்கு அவர்,  ”உழைப்பவர்கள், நல்லவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலையில்தான் எங்கள் பொதுச் செயலாளர் இருக்கிறார். தனுஷ் ஒரு முன்னணி நடிகர். இன்றைக்கு அவருடைய படங்கள், அவர் நடித்த காட்சிகள் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை. 

இன்றைக்கு ஏழை எளிய மக்கள் இளைஞர்கள் மத்தியில் தனுஷ் என்று சொன்னால் அது ஒரு தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. 

அவரைப் போன்று நடிகர்கள் எங்கள் இயக்கத்திற்கு வந்தால் அவர்களை இரு கரம் கூப்பி வரவேற்காமல் என்ன செய்வோம்? 

அதேசமயம் நீங்கள் கேட்கின்ற கேள்வி உண்மையா அல்லது வதந்தியா என்பதை காலம்தான் சொல்லும். 

நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால் அரசியலுக்கு வந்துவிட்டு நடிக்க கூடாது. 

எம்ஜிஆர் நடிகராக இருந்தார். நடிகராக இருந்த போதே அரசியல்வாதியாகவும் இருந்தார். 

திமுகவில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அந்த கட்சியின் பொருளாளராகவும் இருந்தார்.

இப்படி பல்வேறு பதவிகளில் பரிணாம வளர்ச்சி பெற்று அரசியல் பயின்று மக்களுக்கு உதவி செய்து ஏழை எளிய மக்களுக்கு, இல்லாத மக்களுக்கு எல்லாம் தொண்டு செய்து வளர்ந்தவர் எம்ஜிஆர். 

இன்றைக்கு இருக்கக்கூடியவர்கள் சினிமாவிலும் நடித்தார்கள். அரசியலிலும் நடிக்கிறார்கள். இதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வருங்காலத்தில் அவர்களுக்கு பாடத்தை புகட்டுவார்கள்” என்று கூறினார்.  

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share