சென்னை: ரூ.700 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல்!

By Pandeeswari Gurusamy

|

Published on 19 Nov 2026, 1:24 PM

சென்னையில் ரூ.700 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சென்னை மாதவரம் அருகே நடமாடும் ஐஸ்கிரீம் வாகனத்தில் மறைத்து வைத்து கடத்த முயன்ற சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மாதவரத்தில் உள்ள ஒரு ஐஸ் தொழிற்சாலை அருகே ஐஸ் கட்டிகளை ஏற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடமாடும் ஐஸ்கிரீம் வாகனத்தை மடக்கிப் பிடித்துச் சோதனையிட்டனர். அந்த வாகனத்தின் குளிர்பதனப் பெட்டிக்குள் 70 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் 700 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாகத் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கடத்தல் தொடர்பாக வாகனத்தில் இருந்த அப்துல் ஷுக்கூர் மற்றும் ஷபிக் அகமது ஆகிய இருவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தென் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் இருவரும் தற்போது சென்னையில் வசித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் இந்தப் போதைப்பொருளைத் தங்களிடம் கொடுத்து வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்லச் சொன்னதாகப் பிடிபட்டவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட இருவரும் புதன்கிழமை இரவு ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, இந்த ஹெராயின் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்பட இருந்தது மற்றும் இதன் பின்னணியில் வேறு யாருக்குத் தொடர்பு உள்ளது, முக்கியக் குற்றவாளிகள் யார் என்பது குறித்து வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போதைப்பொருட்களை தடுக்க தமிழக அரசும், காவல்துறையும் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பவனம் கார்த்திக் தனது எக்ஸ் பதிவில், தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை அதிகாரிகள் ஒரு காவல் நிலைய எல்லைக்குள் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தால், சம்பந்தப்பட்ட உள்ளூர் காவல் நிலைய ஆய்வாளர் & காவலர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தார் DGP மகேஷ்குமார் அகர்வால்.

இந்நிலையில், சென்னை, மாதவரத்தில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான 70 கிலோ ஹெராயினைக் கைப்பற்றியிருக்கிறது ஒன்றிய வருவாய் புலனாய்வு பிரிவு (DRI) .

264 கோடி மதிப்பீட்டில் தவெக அரசு அமைத்த போதைப்பொருள் தடுப்புப்படை தூங்குகிறதா? என்ன செய்யப் போகிறார் மகேஷ் குமார் அகர்வால்?”என கேள்வி எழுப்பி உள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel