கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு இன்று (நவம்பர் 19) காலமானதைத் தொடர்ந்து, கொளத்தூர் சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டவர் தவெக வேட்பாளர் விஎஸ் பாபு. இந்த தேர்தலில் வி.எஸ். பாபு 82,997 வாக்குகளையும், மு.க.ஸ்டாலின் 74,202 வாக்குகளையும் பெற்றனர். அதிமுக வேட்பாளர் பி.சந்தான கிருஷ்ணன் 18,430 வாக்குகளைப் பெற்றார். இத்தேர்தலில் வி.எஸ். பாபு, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே நீண்டகால சுவாசப் பிரச்சினை காரணமாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 9-ந் தேதி வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார் வி.எஸ்.பாபு. ஆனால் செப்டம்பர் 22-ந் தேதிக்கு பிறகு அவரது உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இது சர்ச்சையாக வெடித்தது.
இந்த நிலையில் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்களை வெளியிடக் கோரி, நேற்று நவம்பர் 18-ந் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட செம்பியம் பகுதியைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தமது மனுவில், செப்டம்பர் 9-ந் தேதி முதல் வி.எஸ். பாபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் 2.24 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வி.எஸ். பாபு உயிரிழந்ததாக எம்ஜிஎம் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தற்போது வி.எஸ்.பாபு காலமான நிலையில் கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 5 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. முதல்வர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார். பின்னர் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளது.
இதேபோல அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா காரணமாக பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளும் காலியாக உள்ளன. இந்த 4 தொகுதிகள் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் விசாரணையின்போது இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தற்போது வி.எஸ். பாபுவின் மறைவால் கொளத்தூர் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட இருக்கிறது. இதனால் தமிழகத்தில் இடைத்தேர்தலை எதிர்நோக்கியுள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கிறது.









