சென்னையில் 71.24 கிலோ போதைப் பொருள்- இந்தியாவிலேயே மிகப் பெரிய ‘ஹெராயின்’ கடத்தல் சிக்கியது எப்படி?

By Mathi

|

Published on 19 Nov 2026, 6:58 PM

Heroin Seizure

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 71.24 கிலோ ஹெராயின் சென்னையில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ”2026-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே ஒரே நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான ஹெராயின் இது” என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் இன்று (நவம்பர் 19) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

சர்வதேச அளவில் நடைபெறும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடல் வழியாக இலங்கைக்கு 71.24 கிலோ ஹெராயின் கடத்தும் முயற்சியை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

சென்னையில் இருந்து மிகப்பெரிய அளவில் ஹெராயின் போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் கடலோரப் பகுதி வழியாக இலங்கைக்குக் கடத்தப்பட இருப்பதாக DRI அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

ADVERTISEMENT

இந்தத் தகவலின் அடிப்படையில் நவம்பர் 17, 18-ந் தேதிகளில் சென்னையில் DRI அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதிகாரிகள் குழுவாகத் திட்டமிட்டு நடத்திய இந்த நடவடிக்கையில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

2026-ஆம் ஆண்டில் இந்தியாவில் இதுவரை ஒரே நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான ஹெராயின் போதைப்பொருள் இதுவாகும்.

ADVERTISEMENT

ரகசியத் தகவல் கிடைத்ததும் உடனடியாகச் செயல்பட்ட DRI அதிகாரிகள், சென்னையில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை வழிமறித்தனர். அந்த வாகனத்துக்குப் பாதுகாப்பாகச் சென்ற இருசக்கர வாகனத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

சந்தேகத்திற்கிடமான வாகனத்தை முழுமையாகச் சோதனையிட்டபோது, அதற்குள் 69 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பொட்டலங்களில் வெண்மை கலந்த நிறத்தில் தூள் போன்ற பொருள் இருந்தது. அது ஹெராயின் போதைப்பொருள் என்பது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட 69 பொட்டலங்களின் மொத்த எடை 71.24 கிலோ ஆகும். இது பொட்டலங்களையும் சேர்த்து கணக்கிடப்பட்ட எடை.

இந்த ஹெராயின் போதைப்பொருளை 1985-ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் (NDPS Act, 1985) கீழ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை – திருச்சி – இலங்கை

இந்தக் கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மேலும் சில தகவல்கள் தெரியவந்தன. சென்னையை மையமாகப் பயன்படுத்தி இந்த ஹெராயின் போதைப்பொருளை திருச்சி வழியாகக் கடலோரப் பகுதிக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டிருந்தனர். பின்னர் அங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போதைப்பொருளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் அதற்குப் பாதுகாப்பாகச் சென்ற இருசக்கர வாகனம் ஆகிய 2 வாகனங்களையும் DRI அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்தக் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை 1985-ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் சர்வதேச அளவில் சட்டவிரோதமாக நடைபெறும் போதைப்பொருள் விற்பனைக்காகப் பெருமளவில் ஹெராயின் கொண்டு செல்லப்பட இருந்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.

நாடுகளுக்கு இடையே நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் செயல்பாடுகளைத் தடுப்பதற்கு ரகசியத் தகவல்களைச் சேகரித்து, அதன் அடிப்படையில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்தச் சம்பவம் காட்டுகிறது.

நாகையில் 137 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

சென்னையில் தற்போது 71.24 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்படுவதற்கு முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் நாகப்பட்டினம் அருகே உள்ள கடலோரக் கிராமம் ஒன்றிலும் DRI அதிகாரிகள் மிகப்பெரிய அளவில் போதைப்பொருளைப் பறிமுதல் செய்திருந்தனர்.

அப்போது 137 கிலோ மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அந்தப் போதைப்பொருளையும் கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்பட்டது.

நாகப்பட்டினத்தில் 137 கிலோ மெத்தம்பெட்டமைன், தற்போது சென்னையில் 71.24 கிலோ ஹெராயின் என அடுத்தடுத்து மிகப்பெரிய அளவில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்களைக் கண்டுபிடித்துத் தடுக்க முடிகிறது. இதற்காக DRI அதிகாரிகள் ரகசியத் தகவல்களைத் திரட்டுவதிலும், கடத்தல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிப்பதிலும், தகவல் கிடைத்தவுடன் சோதனை நடத்தத் தயாராக இருப்பதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel