ரோஹிங்கியா முஸ்லிம்களை ‘இனப்படுகொலை’ செய்த மியான்மர் அரசே குற்றவாளி என சர்வதேச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரு நாட்டின் அரசே இனப்படுகொலைக்குப் பொறுப்பு என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளிப்பது இதுவே முதல்முறை.
இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மியான்மரின் வடக்கு ராக்கைன் மாநிலத்தில் 2017-ஆம் ஆண்டு ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளின்போது இனப்படுகொலை நடந்துள்ளது. இதன் மூலம் இனப்படுகொலையைத் தடுப்பது மற்றும் தண்டிப்பது தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தை மியான்மர் அரசு மீறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியா, 2019-ஆம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி மியான்மருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் 2020-ஆம் ஆண்டு ஜனவரி 23-ந் தேதி மியான்மருக்கு இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிமன்றம், 2022-ஆம் ஆண்டு ஜூலை 22-ந் தேதி இந்த வழக்கை விசாரிப்பதற்குத் தனக்கு அதிகாரம் இருப்பதையும் உறுதி செய்தது.
இந்த வழக்கில் 11 நாடுகள் தலையிட்டு இனப்படுகொலை தடுப்பு ஒப்பந்தத்தின் விதிகள் தொடர்பாகத் தங்களது கருத்துகளை முன்வைத்தன. கடந்த ஜனவரி 12-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்றது.
நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலைதான்..
2017-ஆம் ஆண்டு மியான்மர் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடந்துள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாதுகாப்புப் படையினருடன் இணைந்து செயல்பட்ட தனிநபர்கள் இனப்படுகொலையில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டிய கடமையையும் மியான்மர் அரசு நிறைவேற்றவில்லை. இந்த இரண்டு முடிவுகளும் தலா 9 நீதிபதிகள் ஆதரவாகவும் 6 நீதிபதிகள் எதிராகவும் வாக்களித்ததன் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், ரோஹிங்கியா மக்களுக்கு எதிராகத் தனிநபர்கள் இனப்படுகொலை நடத்துவதற்கு மியான்மர் அரசு நேரடியாகவும் வெளிப்படையாகவும் தூண்டியதாகக் கூறப்பட்ட குறிப்பிட்ட குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த முடிவுக்கு 14 நீதிபதிகள் ஆதரவாகவும் ஒரு நீதிபதி எதிராகவும் வாக்களித்தனர்.
குற்றவாளிகளைத் தண்டிக்க உத்தரவு
இனப்படுகொலை மற்றும் அது தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க வேண்டிய கடமையை மியான்மர் அரசு நிறைவேற்றவில்லை என்று 11 நீதிபதிகள் ஆதரவுடனும் 4 நீதிபதிகள் எதிர்ப்புடனும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இனப்படுகொலை தடுப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான சட்டங்களை மியான்மர் இயற்றவில்லை என்றும் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. எனவே, இனப்படுகொலை தடுப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று மியான்மர் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு நடந்த ராணுவ நடவடிக்கைகளில் இனப்படுகொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக நியாயமான சந்தேகத்துக்கு உள்ளாகும் அனைவரிடமும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுபோன்ற இனப்படுகொலை சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது என்பதற்கான உறுதிமொழிகளையும் உத்தரவாதங்களையும் மியான்மர் அரசு வழங்க வேண்டும்.
ரோஹிங்கியா மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப வேண்டும்
மியான்மர் அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளால் சொந்த வீடுகளை விட்டு வெளியேறிய ரோஹிங்கியா மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மியான்மருக்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களும் பாதுகாப்பாகவும் தங்களது விருப்பத்தின் அடிப்படையிலும் கண்ணியத்துடனும் சொந்த வசிப்பிடங்களுக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரிந்த குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த உத்தரவுக்கு 10 நீதிபதிகள் ஆதரவாகவும் 5 நீதிபதிகள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
ரோஹிங்கியா மக்களுக்கு இழப்பீடு
இனப்படுகொலை தடுப்பு ஒப்பந்தத்தை மீறியதால் ரோஹிங்கியா சமூகத்திற்கும் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மியான்மர் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
மற்ற நிவாரண நடவடிக்கைகள் மூலம் ஈடுசெய்யப்படாத இழப்புகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இழப்பீட்டுத் தொகை எவ்வளவு, அதை எந்த முறையில் வழங்க வேண்டும் என்பது குறித்து அடுத்தகட்ட விசாரணையில் சர்வதேச நீதிமன்றம் முடிவு செய்யும்.
இதற்காக, தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மியான்மர் அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதில் மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள், இழப்பீட்டுத் தொகை மற்றும் அதை வழங்கும் நடைமுறைகள் குறித்து விளக்க வேண்டும்.
ஆதாரங்களைப் பாதுகாக்கத் தவறிய மியான்மர்
இனப்படுகொலை தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று 2020-ஆம் ஆண்டு ஜனவரி 23-ந் தேதி சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த ஆதாரங்கள் அழிக்கப்படுவதைத் தடுக்கவும் அவற்றைப் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை மியான்மர் அரசு மேற்கொள்ளவில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த முடிவுக்கு 11 நீதிபதிகள் ஆதரவாகவும் 4 நீதிபதிகள் எதிராகவும் வாக்களித்தனர்.
மேல்முறையீடு செய்ய முடியாது
சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இறுதியானது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. காம்பியா, மியான்மர் ஆகிய இரு நாடுகளும் இந்தத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டவை. அதேநேரத்தில், ரோஹிங்கியா மக்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை மற்றும் அதற்கான நடைமுறைகள் குறித்து அடுத்தகட்ட விசாரணை நடைபெறும். இவ்வாறு சர்வதேச நீதிமன்றத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறை
சர்வதேச நீதிமன்றத்தின் வரலாற்றில் ஒரு நாட்டின் அரசே இனப்படுகொலைக்குப் பொறுப்பு என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளன.
1948-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இனப்படுகொலை தடுப்பு மற்றும் தண்டனை தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையில் மியான்மர் அரசுதான் இனப்படுகொலைக்கு பொறுப்பு என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கில் மற்றொரு முக்கியமான அம்சம், இனப்படுகொலை நடைபெற்றதாகத் தீர்ப்பளித்ததுடன் நீதிமன்றம் நின்றுவிடவில்லை என்பதுதான். குற்றங்களில் ஈடுபட்டவர்களை விசாரித்துத் தண்டிப்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவது, சொந்த ஊர்களுக்குத் திரும்ப வழிவகை செய்வது, மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது என மியான்மர் அரசுக்குப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
மேலும், ரோஹிங்கியா மக்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் சர்வதேச நீதிமன்றம் தன்னிடமே வைத்துள்ளது.
பல ஆண்டுகளாக நீடித்து வந்த ரோஹிங்கியா இனப்படுகொலை விவகாரத்தில், மியான்மர் அரசின் சர்வதேச சட்டப் பொறுப்பை உறுதி செய்துள்ள இந்தத் தீர்ப்பு, இனப்படுகொலை தொடர்பான சர்வதேச நீதிமன்ற வழக்குகளின் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் தீர்ப்பு
மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு அந்த நாட்டு அரசே பொறுப்பு என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கோரி வரும் ஈழத் தமிழர்களுக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.
2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பின்னணியில், இனப்படுகொலைக்கு ஒரு நாட்டின் அரசையே பொறுப்பாக்க முடியும் என்பதை மியான்மர் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் உறுதி செய்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், குற்றங்களில் ஈடுபட்டவர்களை விசாரித்துத் தண்டிக்க வேண்டும், இடம்பெயர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவுகள், ஈழத் தமிழர்களின் நீண்டகால நீதிக்கான கோரிக்கைகளுக்கு புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
ஐ.நா. பொதுச்செயலாளர் வரவேற்பு
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மர் அரசு இனப்படுகொலை நடத்தியதாக சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அன்டோனியோ குட்டெரெஸ் இன்று (நவம்பர் 19) வெளியிட்டுள்ள அறிக்கை: மியான்மருக்கு எதிராக காம்பியா தொடர்ந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறேன். இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ரோஹிங்கியா மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான மிக முக்கியமான அங்கீகாரம் இந்தத் தீர்ப்பு.
சர்வதேச நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதையும், இத்தகைய கொடூரமான குற்றங்களைச் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியாது என்பதையும் இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
ரோஹிங்கியா சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கொலை செய்தது, அவர்களுக்குக் கடுமையான உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தியது, குழந்தைப் பிறப்புகளைத் தடுக்கும் நோக்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டது ஆகியவற்றின் மூலம் மியான்மர் அரசு இனப்படுகொலை தடுப்பு ஒப்பந்தத்தை மீறியுள்ளது. குறிப்பாக, ரோஹிங்கியா மக்களில் கணிசமான பகுதியினரை அழிக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
இந்த வழக்கில் 10,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது, பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது, மக்கள் மிகக் கடுமையான துன்பங்களை அனுபவித்தது உள்ளிட்ட கொடூரமான உண்மைகளை நீதிமன்றத் தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது.
இனப்படுகொலையைத் தடுக்க வேண்டிய கடமை, இனப்படுகொலை மற்றும் அது தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க வேண்டிய கடமை ஆகியவற்றை மியான்மர் அரசு நிறைவேற்றவில்லை. மேலும், இனப்படுகொலை தடுப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்டங்களையும் இயற்றவில்லை.
இனப்படுகொலை தொடர்பான ஆதாரங்களைப் பெரிய அளவில் அழித்ததுடன், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளுக்கு அனுமதி மறுத்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் முறையான விசாரணைக்கும் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர்வதற்கும் மியான்மர் அரசு தடைகளை ஏற்படுத்தியுள்ளது. இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி, அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும். இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ரோஹிங்கியா மக்களுக்கு உரிய, பயனுள்ள நிவாரணங்களை விரைவாக வழங்க வேண்டும்.
ரோஹிங்கியா பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்களுக்கும் தீர்வு காணும் வகையில், அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வை உருவாக்குவதற்கான முயற்சிகளை சர்வதேச சமூகம் வலுப்படுத்த வேண்டும். இதற்காக மியான்மருக்கான சிறப்புத் தூதர் ஜூலி பிஷப் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு சர்வதேச நாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.









