கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பில் பணியாற்றிய 15 மூத்த அதிகாரிகள், ஆந்திரப் பிரதேசத்துக்கு ரகசிய முதலீட்டுத் தகவல்களைக் கசியவிட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலர் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதுடன், திமுக ஆட்சியிலும் தொடர்ந்து பணியாற்றியவர்கள் என கூறப்படுகிறது.
புகார் என்ன?

தமிழகத் தொழில்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பு, மாநிலத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
இந்தசூழலில் தமிழகத்தில் தொழிற்சாலைகளை அமைக்கத் திட்டமிட்டிருந்த நிறுவனங்கள் தொடர்பான ரகசியத் தகவல்கள் ஆந்திரப் பிரதேச அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழக அரசுக்கும், தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்படும் முக்கியமான முதலீட்டுத் தகவல்கள் இதில் அடங்கும் .
தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் குழு நடத்திய ஆய்வின்போது இந்த ரகசியத் தகவல் கசிவு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பணிநீக்கம் செய்யப்பட்ட 15 பேரில் மூவர் தற்போது ஆந்திரப் பிரதேச அரசுடன் இணைந்து பணியாற்றி வருவது இந்தச் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அதாவது, ஹைடன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய, ப்ரீஜா பிரசாத், கிறிஸ்டோ லாரல் எல் மற்றும் பிரபாகரன் ஆண்டி ஆகியோர் அண்மையில் ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் பணியில் சேர்ந்துள்ளனர்.
டிஆர்பி ராஜா கண்டனம்
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, விஜய் தலைமையிலான அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
”பல ஆண்டுகளாக சிறந்த நிபுணர்களால் உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான நிறுவனத்தை தற்போதைய அரசின் முதிர்ச்சியற்ற சமூக ஊடக அரசியல் சீர்குலைத்து வருகிறது.
ஒரு சில ஊழியர்கள் வெளியேறியதால் தமிழகத்தின் முதலீட்டுத் திறன் பாதிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் வாதம் அதைவிடப் பரிதாபகரமானது.
தமிழகத்தின் தொழில் முதலீட்டு அமைப்பும், தொழில்துறை கட்டமைப்பும் அவ்வளவு பலவீனமானதா என்ன?
பணியிலிருந்து வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் 2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் .
2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது அவர்களைப் பணியிலிருந்து நீக்கவில்லை . அவர்களின் அனுபவத்துக்கு மதிப்பளித்து நிறுவனத்தின் தொடர்ச்சியான செயல்பாட்டை உறுதி செய்தோம்.
தமிழ்நாட்டிலிருந்து முதலீடுகளை யாராலும் அவ்வளவு எளிதில் எடுத்துச் சென்றுவிட முடியாது.
நிறுவனங்களுக்குத் தேவை தலைமைப் பண்பே தவிர, அரசியல் நாடகங்கள் அல்ல” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி மறுப்பு
இதற்கிடையே, தமிழகத்தின் தொழில் முதலீட்டுத் தகவல்களை ஆந்திரப் பிரதேசம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மறுத்துள்ளது.
அக்கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாச ராவ், ”ஆந்திரப் பிரதேசம் தனது சொந்த முதலீட்டுக் கொள்கைகள் மூலமாகவே தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது.
மற்ற மாநிலங்களுடன் ஆரோக்கியமான போட்டியை மட்டுமே விரும்புகிறோம். மற்ற மாநிலங்களின் முதலீட்டுக் கொள்கைகளை காப்பியடிக்க வேண்டிய அவசியம் ஆந்திராவுக்கு இல்லை” என்று கூறியுள்ளார்.
எழும் கேள்விகள்
கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பில் நடைபெற்றதாகக் கூறப்படும் தகவல் கசிவு விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில், இன்னும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.
எந்தெந்த தொழில் நிறுவனங்களின் முதலீட்டுத் தகவல்கள் கசியவிடப்பட்டன?
ரகசியத் தகவல்களை ஆந்திராவுக்கு வழங்கியதற்கான ஆதாரங்கள் என்ன?
பணிநீக்கம் செய்யப்பட்ட 15 பேருக்கும் இந்த விவகாரத்தில் என்ன தொடர்பு?
தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்குச் சென்றதாகக் கூறப்படும் முதலீடுகளுக்கும் இந்தத் தகவல் கசிவுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதா?
மூன்று முன்னாள் அதிகாரிகள் உடனடியாக ஆந்திர அரசுப் பணியில் சேர்ந்தது எப்படி? உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக ஆளும் தமிழக வெற்றிக் கழகமோ, அரசு தரப்போ, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவோ இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.









