இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை டிசம்பர் 8ஆம் தேதிக்குள் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு முதல், ஆண்டு வாரியாக பணி மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆண்டு வாரியாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என கடந்த ஜூன் 6ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் இந்த உத்தரவு இன்னும் அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி இடைநிலை ஆசிரியர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த அவமதிப்பு வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று (நவம்பர் 19) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில், கடந்த ஜூன் 6-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி ஜூன் 6-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு இதுவரை எந்த தடை உத்தரவும் இல்லை. எனவே பதவி உயர்வுக்கான கலந்தாய்வை தொடர்ந்து நடத்தலாம். அது மேல்முறையீடு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது.
எனவே ஜூன் 6-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் டிசம்பர் 8ம் தேதிக்குள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தியது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் இந்த உத்தரவை நிறைவேற்ற தவறினால் பள்ளி கல்வித்துறை செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குனர் உள்ளிட்ட பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் டிசம்பர் 8ம் தேதி நேரில் ஆஜராக வேண்டி வரும் என்றும் எச்சரித்த நீதிபதி வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தார்.









