நகை கொள்ளையில் மீனாட்சிக்கு தொடர்பில்லை : நிஷாந்த் 

By Kavi

|

Published on 19 Nov 2026, 9:41 PM

Meenakshi has no connection to tanishq

தனிஷ்க் நகை கடையில் கொள்ளை அடித்ததில் மீனாட்சிக்கு தொடர்பு இல்லை என்று கைது செய்யப்பட்ட நிஷாந்த் கூறியுள்ளார். 

மதுரை காளவாசல் பகுதியில் உள்ள தனிஷ்க் நகை கடையில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. 11.384 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. 

ADVERTISEMENT

இது தொடர்பாக எஸ்.எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இந்த வழக்கில் மதுரை, பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் நிஷாந்த் (25)கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். 

அவருடைய தந்தை சுரேஷ், இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 

ADVERTISEMENT

தொடர்ந்து, கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளையும் போலீசார் மீட்டனர். 

இந்த சூழலில் கைதானவர்களை டிசம்பர் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிடப்பட்ட நிலையில்  அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

மீண்டும் இன்று (நவம்பர் 19) மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிஷாந்த் ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது நீதிபதியிடம் நிஷாந்த், மீனாட்சிக்கும் தனது தந்தைக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று தெரிவித்தார். 

இதைக் கேட்ட நீதிபதி, கொள்ளை வழக்கில் யாருக்கு தொடர்பு என இப்போது பேசக்கூடாது. போலீஸ் கஸ்டடி குறித்த மனு மீது மட்டுமே தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார். 

இதைத்தொடர்ந்து காவல்துறை தரப்பில், நிஷாந்த் பல நாட்கள் திட்டமிட்டு சுயநினைவுடன் இந்த கொள்ளை சம்பவத்தை செய்துள்ளார். அவரை கட்டாயம் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. 

இதைத்தொடர்ந்து நிஷாந்தை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட நீதிபதி ராஜபிரபு உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் நிஷாந்தை துன்புறுத்தக் கூடாது, அவரது வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. 

போலீசார் ஐந்து நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கேட்ட நிலையில் ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து மீண்டும் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக நிஷாந்த் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டார். 

அப்போது ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த அவரிடம் செய்தியாளர்கள், நிஷாந்த் ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேள்வி எழுப்பினர். 

உடனே காவல்துறை வாகனத்தின் ஜன்னல் வழியாக பேட்டியளித்த நிஷாந்த், இந்தக் கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

உடனே அருகில் இருந்த போலீசார் ஒருவர், என்ன சொல்ற என்று கூறியவாறு நிஷாந்தை இழுத்து பிடித்து தன்னருகே அமர வைத்தார். 

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel