நரைமுடிக்குக் கெமிக்கல் டை வேணாம்! வீட்டிலேயே ஹேர் பேக் செய்யலாம்!

By Minnambalam Desk

|

Published on 20 Nov 2026, 6:30 AM

இளம் வயதிலேயே நரைமுடி வந்துவிட்டால் எல்லோருக்கும் கவலைதான். அதை மறைக்கக் கடையில் கிடைக்கும் ஹேர் டையை அடிக்கடி பயன்படுத்துபவர்களும் நிறைய.

ஆனால் சிலருக்கு ரசாயன டைகளால் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரலாம். அதனால், நம் பாரம்பரியப் பொருளான மருதாணியை வைத்து வீட்டிலேயே இயற்கையான ஹேர் பேக் தயாரிக்கலாம். இதோடு நெல்லிக்காய், தேயிலை, கிராம்பு, காபி சேர்ப்பதன் மூலம் முடிக்கு இயற்கையான நிறம் கிடைக்கும்.

ADVERTISEMENT

என்னென்ன வேண்டும்?

  • மருதாணிப் பொடி – 1 கப் (கலப்படமில்லாதது)
  • தேயிலைத் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
  • கிராம்பு – 5
  • நெல்லிக்காய்ப் பொடி – 2 டேபிள்ஸ்பூன்
  • காபித் தூள் – 1 டேபிள்ஸ்பூன்
  • தயிர் – 2 டேபிள்ஸ்பூன்

தயாரிக்கும் முறை

ADVERTISEMENT

முதலில் இரண்டு கப் தண்ணீரில் தேயிலைத் தூளையும் கிராம்பையும் போட்டு நன்றாகக் கொதிக்கவிடுங்கள். வடிகட்டி ஆறவைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு ஓர் இரும்புப் பாத்திரத்தில் மருதாணிப் பொடி, நெல்லிக்காய்ப் பொடி, காபித் தூள் மூன்றையும் போடுங்கள். ஆறிய தேயிலைக் கஷாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கட்டி இல்லாமல் கலக்க வேண்டும். இந்தக் கலவையை 6 முதல் 8 மணி நேரம் மூடி வைத்துவிடுங்கள். பயன்படுத்தும் முன் தயிர் சேர்த்துக் கலந்தால் ஹேர் பேக் தயார்.

ADVERTISEMENT

எப்படித் தடவுவது?

எண்ணெய்ப் பசை இல்லாத சுத்தமான முடியில் இதைத் தடவுங்கள். முடியைச் சின்னச் சின்னப் பகுதிகளாகப் பிரித்து வேரிலிருந்து நுனி வரை பூச வேண்டும். 2 முதல் 3 மணி நேரம் ஊறவிட்டு, வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். மருதாணி போட்டால் பொதுவாகச் செம்பழுப்பு நிறம் கிடைக்கும். அடர் நிறம் வேண்டும் என்பவர்கள், மறுநாள் அவுரிப் பொடியைப் பயன்படுத்தும் முறையையும் பின்பற்றலாம்.

பயன்படுத்தும்போது கவனம்

  • முதல்முறை பயன்படுத்துபவர்கள் காதுக்குப் பின்னால் கொஞ்சம் தடவி, ஒவ்வாமை வருகிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
  • இயற்கைப் பொருள்தான் என்றாலும், எல்லோருக்கும் ஒரே மாதிரிப் பலன் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel