முனைவர் பாலமுருகன் பழனியாண்டி
உலக குழந்தைகள் நாள் – நவம்பர் 20
“நல்ல குடும்பப் பின்னணியைக் கொண்ட குழந்தையில்லாத தம்பதியினர், ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகின்றனர். பெற்றோர் இல்லாத அல்லது ஆதரவற்ற குழந்தைகள் பற்றிய தகவல் தெரிந்தால், தயவுசெய்து தெரிவிக்கவும்”. அடிக்கடி புலனத்தில் காணப்படும் இத்தகைய செய்திகள், குழந்தையைத் தத்தெடுப்பது தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்த புரிதல் சமூகத்தில் இன்னும் போதுமானதாக இல்லை என்பதைக் காட்டுகின்றன. தத்தெடுப்பு என்பது குழந்தையைப் பெறுவதற்கான ஒரு வழிமுறை அல்ல; அது ஒரு குழந்தையின் உரிமை, பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சட்டப்பூர்வமான செயல்முறை.
இந்தியாவில் குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் சட்டப்பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றுவது மிக அவசியம். இரண்டு சட்டங்களின் கீழ் தத்தெடுக்கலாம் – சிறார் நீதிச் சட்டம், 2015 மற்றும் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம், 1956 (HAMA). சிறார் நீதிச் சட்டத்தின்படி, குழந்தைத் தத்தெடுப்பு என்பது மிகவும் நுணுக்கமான மற்றும் சட்டரீதியான ஒரு செயல்முறையாகும். குழந்தைகளின் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதி செய்ய இந்திய அரசு கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளது. நீண்ட நாட்கள் காத்திருத்தல் போன்ற சில சிரமங்கள் இருந்தாலும், அமைப்பு ரீதியாக வெளிப்படையான மற்றும் கண்காணிப்புக்குட்பட்ட பாதுகாப்பான முறையாக உள்ளது. ஆனால், HAMA-ன் கீழ் நடைபெறும் நேரடித் தத்தெடுப்பில், JJ Act-ல் இருப்பதைப் போன்ற விரிவான நிறுவன ரீதியான கண்காணிப்பு இல்லாததால், சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் குறித்து கவலைகள் எழுகின்றன. குழந்தை விற்பனை, சட்டவிரோத இடமாற்றம் போன்ற அபாயங்களைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு நடைமுறைகள் அவசியமாகின்றன.
சிறார் நீதிச் சட்டம், 2015

இச்சட்டத்தின் கீழ், மத்திய தத்தெடுப்பு வள ஆணையம், மாநில தத்தெடுப்பு வள முகமை, 672 (தமிழ்நாடு – 27) சிறப்புத் தத்தெடுப்பு நிறுவனங்கள், மற்றும் 49 அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு தத்தெடுப்பு நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தை நலக் குழுவால் சட்டப்பூர்வமாக தத்தெடுக்கத் தடையற்றவர் என்று அறிவிக்கப்பட்ட பெற்றோர் இல்லாத, கைவிடப்பட்ட அல்லது ஒப்படைக்கப்பட்ட எந்தவொரு குழந்தையும்; பிரிவு 2-இன் உட்பிரிவு (52)-இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள ஒரு உறவினரின் குழந்தை; முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த கணவன்/மனைவியின் குழந்தை அல்லது குழந்தைகள், வளர்ப்புப் பெற்றோர் (மாற்றாந்தாய் அல்லது மாற்றாந்தகப்பன்) தத்தெடுப்பதற்காக அவர்களின் உடன்பிறந்த பெற்றோரால் (biological parents) ஒப்படைக்கப்படும் குழந்தைகள் என அனைவரும் தத்தெடுக்கத் தகுதியான குழந்தைகள் எனக் கூறப்பட்டுள்ளது.
தத்தெடுக்கும் முறை
சாதி, மதம் கடந்து யார் வேண்டுமானாலும் இந்த முறையின் கீழ் தத்தெடுக்கலாம். இதுவே மிகவும் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான முறையாகும். தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் முதலில் CARA இணையதளத்தில் (CARINGS) ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். தேவையான ஆவணங்களை (வருமானச் சான்று, மருத்துவச் சான்று, திருமணச் சான்று போன்றவை) பதிவேற்ற வேண்டும்; பதிவு செய்த பிறகு, உங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்புத் தத்தெடுப்பு முகமையின் (SAA) சமூகப் பணியாளர் உங்கள் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்வார்; நீங்கள் குழந்தையை வளர்க்கத் தகுதியானவரா என்பதை உறுதி செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்; உங்கள் முறை வரும்போது, தத்தெடுப்புக்குத் தயாராக உள்ள குழந்தைகளின் விபரங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் உங்களுக்கு காட்டப்படும்; நீங்கள் ஒரு குழந்தையைத் தேர்வு செய்ய வேண்டும்; பிறகு, நீங்கள் குழந்தையை நேரில் சென்று பார்க்கலாம். மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளையும் சரிபார்க்கலாம்; குழந்தையைத் தத்தெடுக்க ஒப்புக்கொண்ட பிறகு, மாவட்ட ஆட்சியர் அல்லது நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வமான தத்தெடுப்பு ஆணை வழங்கப்படும்; நீதிமன்ற ஆணைக்குப் பிறகு, குழந்தையின் பெயரில் புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
தத்தெடுப்பின் நிலை
இந்தியாவில், கடந்த 2015-16 ஆண்டு முதல் 2025-26 வரை, தத்தெடுப்பு வள மையங்கள் மூலமாக தத்து கொடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 43135; வெளிநாடுகளுக்கு 5432 குழந்தைகள். 2015-16 ஆண்டில் 3677 இருந்த எண்ணிக்கை, பதினோரு ஆண்டுகளில் சுமார் 12 மடங்கு அதிகரித்துள்ளது. 2025-26 ஆண்டில், இந்தியா முழுவதும் மொத்தம் 5,022 குழந்தைகள்; இதில் 4,603 குழந்தைகள் (91.7%) உள்நாட்டில்; 419 குழந்தைகள் (8.3%) வெளிநாட்டு இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். பாலின அடிப்படையில் பார்க்கும்போது, 2,756 பேர் பெண் குழந்தைகள்; 2,263 பேர் ஆண் குழந்தைகள். பெண் குழந்தைகள் அதிக அளவில் தத்தெடுக்கப்பட்டிருப்பது, சமூகத்தில் பெண் குழந்தைகளைப் பற்றிய நேர்மறையான அணுகுமுறை வளர்ந்து வருவதற்கான ஒரு முக்கிய அறிகுறியாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாடு மூன்றாமிடம்
தரவுகளின்படி, மகாராஷ்டிரா (792) முதலிடம்; குஜராத் (547) இரண்டாம் இடம்; தமிழ்நாடு (501) மூன்றாம் இடம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2025–26 ஆம் ஆண்டில் மொத்தம் 501 குழந்தைகள்; இதில் 446 குழந்தைகள் (89%) இந்திய குடும்பங்களாலும்; 55 குழந்தைகள் (11%) வெளிநாட்டு குடும்பங்களாலும் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளில் 278 பேர் பெண் குழந்தைகள், 223 பேர் ஆண் குழந்தைகள். 62 சிறப்புத் தேவையுள்ள குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 52 குழந்தைகள் வெளிநாட்டு குடும்பங்களாலும், 10 குழந்தைகள் மட்டுமே இந்தியக் குடும்பங்களாலும் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். இது தேசிய அளவில் காணப்படும் போக்கையே தமிழ்நாடும் பிரதிபலிக்கிறது.
இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம், 1956 (HAMA)

இது, இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதில் பெற்றோர்கள் தங்கள் உறவினர்களிடமிருந்தோ அல்லது தெரிந்தவர்களிடமிருந்தோ நேரடியாகத் தத்தெடுக்கலாம். தத்தெடுப்பவருக்கு ஏற்கனவே அதே பாலினத்தில் குழந்தை இருக்கக்கூடாது. சார்பதிவாளர் அலுவலகத்தில் தத்தெடுப்புப் பத்திரம் பதிவு செய்யப்படுவது வழக்கம்.
ஒரு தத்தெடுப்புப் பத்திரம் முறைப்படி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு, அதில் குழந்தையைக் கொடுத்தவரும் (பெற்றோர்), குழந்தையைத் தத்து எடுத்தவரும் கையெழுத்திட்டு இருந்தால், அந்தத் தத்தெடுப்பு சட்டப்படி சரியாக நடந்ததாகவே நீதிமன்றம் ஆரம்பத்தில் எடுத்துக்கொள்ளும். யாராவது ஒருவர் அந்தத் தத்தெடுப்பு செல்லாது என்றோ, அல்லது சட்டத்தை மீறி நடந்தது என்றோ நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கும் வரை, அந்தப் பதிவு செய்யப்பட்ட பத்திரம் உண்மையானதாகவே கருதப்படும்.
பதிவு செய்யப்பட்ட பத்திரம் இருந்தால், சட்டம் அது சரியானது என்றுதான் முதலில் நம்பும். அதை எதிர்ப்பவர்தான் “இது தவறு” என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்.
பிரிவு 17- இன் படி, தத்தெடுப்புக்காகப் பணம் கொடுப்பதோ அல்லது வாங்குவதோ சட்டப்படிக் குற்றம். அப்படிச் செய்தால் 6 மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம். ஆனால், இந்த நடவடிக்கையை எடுக்க மாநில அரசின் முன் அனுமதி தேவை.
தீர்ப்புகள்
சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகளும் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெளிவுபடுத்துகின்றன: தத்தெடுப்பு பத்திரத்தைப் பதிவு செய்வது மட்டுமே சட்டப்பூர்வமான தத்தெடுப்பை உருவாக்காது. சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். பதிவுச் சட்டம், 1908-ன் கீழ் தத்தெடுப்பு பத்திரத்தை பதிவு செய்வது கட்டாயமானதல்ல; சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தத்தெடுப்பு நடைமுறையைப் பின்பற்றாமல் பதிவு செய்யப்பட்டாலும், அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
D.வீரய்யா Vs மாவட்ட ஆட்சியர் என்ற வழக்கில், 2 ஜனவரி , 2026 அன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் நடைபெறும் தத்தெடுப்பும், சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் கீழ் நடைபெறும் தத்தெடுப்பும் வேறுபட்டவை; HAMA-ன் கீழ் முறையாக நடைபெற்ற தத்தெடுப்புக்கு, சிறார் நீதி சட்டத்தின் தத்தெடுப்பு விதிமுறைகள் பொருந்தாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இடைவெளிகள்
HAMA சட்டத்தின் கீழ் தத்தெடுப்பில் போதிய கண்காணிப்பு இல்லாதது ஒரு முக்கியமான குறையாக உள்ளது. உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களிடையே நேரடியாக தத்தெடுப்பு நடைபெறுவதால், குழந்தையின் பின்னணி, தத்தெடுப்பவர்களின் தகுதி, குழந்தையின் பாதுகாப்பு மற்றும் நலன், தத்தெடுப்பிற்குப் பின்னான பராமரிப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்பு இல்லை. இதனால் குழந்தைகளை பணத்திற்கு வழங்குதல், குழந்தை விற்பனை, சட்டவிரோத இடமாற்றம் மற்றும் தத்தெடுப்பு நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற அபாயங்கள் உருவாகக்கூடும். எனவே, HAMA-ன் கீழ் நடைபெறும் தத்தெடுப்புகளிலும் குழந்தையின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய குறைந்தபட்ச கட்டாயப் பதிவு, ஆவணச் சரிபார்ப்பு, சமூகப் பணியாளர் ஆய்வு மற்றும் தத்தெடுப்பிற்குப் பிந்தைய கண்காணிப்பு போன்ற பாதுகாப்பு நடைமுறைகளை அரசு ஏற்படுத்துவது அவசியமாகும்.
தத்தெடுப்பு என்பது ஒரு குழந்தைக்கு புதிய குடும்பத்தை வழங்கும் மனிதநேயமான செயல் மட்டுமல்ல; அந்தக் குழந்தையின் உரிமை, பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் எதிர்காலத்தை உறுதி செய்யும் சட்டப்பூர்வப் பொறுப்பும் ஆகும். எந்தச் சட்டத்தின் கீழ் தத்தெடுப்பு நடைபெற்றாலும், குழந்தையின் நலனே முதன்மையாக இருக்க வேண்டும். “தத்தெடுப்பவர்களின் உரிமையை மட்டும் உறுதி செய்வது போதாது; தத்தெடுக்கப்படும் குழந்தையின் உரிமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதே உண்மையான தத்தெடுப்பு.” இதை நோக்கமாகக் கொண்டு, அனைத்து தத்தெடுப்பு முறைகளிலும் ஒரே மாதிரியான குழந்தை பாதுகாப்பு தரநிலைகளை அரசு உருவாக்க வேண்டிய நேரம் இது. தத்தெடுப்பில் கேட்கப்பட வேண்டிய முதல் கேள்வி ‘யார் குழந்தையைத் தத்தெடுக்கிறார்கள்?’ என்பதல்ல; ‘அந்தக் குழந்தையின் உரிமை மற்றும் பாதுகாப்பை யார் உறுதி செய்கிறார்கள்?’ என்பதாக இருக்க வேண்டும்.
கட்டுரையாளர்:
முனைவர் பாலமுருகன் பழனியாண்டி, மனித உரிமை செயற்பாட்டாளர்










