என்னிடம் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை – முன்னாள் அமைச்சர் மூர்த்தி

By Pandeeswari Gurusamy

|

Published on 20 Nov 2026, 12:18 PM

Minister Moorthy

குவாரி விவகாரத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்னிடம் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

‘சட்டவிரோதமாகக் கனிம வளங்களை அளவுக்கு அதிகமாக வெட்டி எடுத்ததாக, கனிமவளத் துறை ஆய்வின் அடிப்படையில் கோட்டாட்சியர் அறிக்கை அளித்துள்ளார். அதில், வாடிப்பட்டி வட்டம் சத்திர வெள்ளாளப்பட்டி பகுதியில் உள்ள குவாரி குத்தகைதாரர் ஒருவர் அனுமதி பெறாத நிலத்திலிருந்து சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமான சரளைக் கற்களை வெட்டி எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூபாய் 2.32 கோடி மற்றும் 3.07 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தப் புகாரின் அடிப்படையில் மதுரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக இன்று மதுரை ஐயர் பங்களா, எழில் நகர் ரோஜா வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீடு முன்பாகக் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சோதனை நடைபெற்று வரும் நிலையில் திமுகவினர் அப்பகுதியில் திரண்டுள்ளனர்.

மேலும், பாலமேடு பகுதியில் வசிக்கும் அவரது உறவினர் தன்ராஜ், அலங்காநல்லூர் பகுதியில் பொன்ராம், சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் அக்கா கணவர் ராஜாமணிக்குச் சொந்தமான வீட்டிலும் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் மூர்த்தி, “

2019ல் எனக்கு சொந்தமான சத்திரவெள்ளாளபட்டியில் உள்ள இடத்தில் குவாரி அமைப்பதற்காக மாவட்ட கலெக்டரும், நானும் சேர்ந்து 5 ஆண்டுகள் குத்தகைக்கு ராஜாமணி, ஆனந்த்ராஜ் ஆகியோருக்கு அனுமதி கொடுத்தோம்.

ADVERTISEMENT

5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கல் குவாரிக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் குவாரிக்கான உகந்த கல் கிடைக்கவில்லை என்று 2021ல் ஆனந்த்ராஜ் கைவிடப்பட்டார். ராஜாமணியும் அதேபோல் ராஜாமணியும் குவாரிக்கான அந்த கற்கள் வெட்டி எடுக்க பணிகள் மேற்கொண்டார். ஆனால், அந்த இடத்தில் கற்கள் இல்லை. இதனால், அந்த இடத்திற்கு அருகே உள்ள எனது பட்டா இடத்தில் மண் எடுத்திருப்பதாக உண்மைக்கு மாறாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆட்சியரிடம் முறையாக அனுமதி வாங்கி குத்தகைக்கு விட்டநிலையில் விதிகளை மீறி மண் எடுத்திருப்பது எனக்கு தெரியாது என ஆர்.டி.ஓ. அலுவலரிடம் தெரிவித்துள்ளேன். இது தொடர்பாக கோர்ட்டிற்கும் சென்றுள்ளேன். அந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து முறையாக நாம் கேட்கும் அளவை அளந்து முறைப்படுத்தி செய்யவேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவையும் கடைபிடிக்காமல் தன்னிச்சையாக ஸ்கேன் செய்தபோது எதிர்ப்பு தெரிவித்து எங்கள் வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இப்போது என் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள். இருவருக்குத்தான் லீசுக்குக் கொடுத்துள்ளோம். இப்போது எந்த விசாரணையும் நடத்தவில்லை; இது உண்மைக்குப் புறம்பான செய்தி. நான் அதுபோல் மண் எடுக்கவோ, ஜல்லி எடுக்கவோ, கல் எடுக்கவோ இல்லை” என்று கூறினார்.

போதைப்பொருள் கடத்தலைத் திசைதிருப்பவே ரெய்டு நடத்தப்படுவதாக திமுக தலைவர் கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “என்னிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் என்ன நடக்கிறது என்று கேட்டார். ‘இது உண்மை இல்லை, ஒன்றும் பிரச்சனை இல்லை’ என்று தெரிவித்துள்ளேன்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “இதில் உண்மை எதுவும் இல்லை. நாங்கள் ஏற்கனவே நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளோம்; இப்போதும் சென்று முறையாகச் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம். குவாரியைப் பொறுத்தவரை 2019-ஆம் ஆண்டு அனுமதி பெற்றுத்தான் லீசுக்குக் கொடுத்துள்ளோம். அதைத் தவிர வேறு என்ன நடந்தது என்று ஒருபோதும் எனக்குத் தெரியாது. நான் அதுபோல் எதுவும் எடுக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel