வங்கக்கடலில் உருவான அக்வான் புயல் ஒடிசா கடற்கரையை நோக்கி நோக்கி நகர்ந்து கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் அருகே கரையை கடந்துள்ளது. இன்று நண்பகலுக்குள் புயல் முழுமையாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்வான் புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 23 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருந்தது. ஆந்திரப் பிரதேசத்தின் கலிங்கப்பட்டினத்திற்குக் கிழக்கே 70 கிலோமீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு 110 கிலோமீட்டர் தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்குக் கிழக்கு-வடகிழக்கே 170 கிலோமீட்டர் தொலைவிலும், பூரிக்குத் தெற்கு-தென்மேற்கே 200 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தது.
இந்தப் புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை கோபால்பூர் அருகே வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், புயலின் வெளிப்புற மேகக்கூட்டங்கள் ஏற்கனவே நிலப்பகுதியை அடைந்த நிலையில், இன்று காலை , 07:30 மணி முதல் 08:30 மணி வரை மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்திலும் காற்றுடன், கோபால்பூருக்கு அருகே வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அக்வான் புயல் காரணமாக இன்று காலை முதல் ஒடிசாவின் புவனேஸ்வர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 மாவட்டங்களில் அபாயகரமான பகுதிகளில் வசித்த சுமார் மூன்று லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 400க்கும் மேற்பட்ட மீட்புக் குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், புயல் கரையைக் கடக்கும்போது ஏற்படக்கூடிய புயல் அலைகள் காரணமாக கடலோர ஒடிசாவின் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, கஞ்சம் மற்றும் பூரி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









